உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  தனியார் வங்கி பங்குகளை முழுமையாக தவிர்க்க வேண்டாம் சந்தை சுழற்சி மாறும் என எதிர்பார்க்கலாம்

 தனியார் வங்கி பங்குகளை முழுமையாக தவிர்க்க வேண்டாம் சந்தை சுழற்சி மாறும் என எதிர்பார்க்கலாம்

இஸ்ரேல் - ஈரான் மோதல் உள்ளிட்ட உலகளாவிய பதற்றங்களால், பங்குச் சந்தைகள் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளன. சந்தை வீழ்ச்சியில் பல பங்குகள் விலை குறைவது இயல்பானதே. ஆனால், இந்திய பங்குச் சந்தையை தாங்கிப் பிடிக்கும் மிகப்பெரிய 'யானைகளாக' கருதப்படும் முன்னணி தனியார் வங்கிகள், அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை அழுத்தத்தால் நகர முடியாமல் தவிக்கின்றன. இதற்கான காரணங்கள் குறித்து 'ஐகுளோபல் ஆல்டர்நேட்' நிறுவனர் சி.கே. சிவராம் தெரிவித்ததாவது: வலுவான அடிப்படை கொண்ட தனியார் வங்கி பங்குகளும் சரிவை சந்திப்பது, இந்திய வங்கி துறையில் நடைபெறும் முக்கியமான கட்டமைப்பு மாற்றங்களை சுட்டிக்காட்டுகிறது. இந்திய பங்குச் சந்தை குறியீடுகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களே உள்ளன. ஐ.டி., துறையில் சரிவு ஏற்பட்டபோது சந்தையை தாங்கி நிறுத்தியது இந்த வங்கி பங்குகள்தான். கடந்த சில ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் அசுர வளர்ச்சியை கண்டுள்ளன. கடந்த ஓராண்டில் பொதுத்துறை வங்கிகள் 43 சதவீத வருமானம் தந்த நிலையில், தனியார் வங்கிகள் 6.80 சதவீதம் மட்டுமே வருமானம் தந்துள்ளன. ஒரு தசாப்தத்துக்கு முன்பு தனியார் வங்கிகளுக்கு சாதகமாக இருந்த லாப பகிர்வு, தற்போது சுமார் 50:50 என்ற சமநிலைக்கு வந்துள்ளது. வாராக்கடன் பிரச்னைகளை சீர்செய்த பொதுத்துறை வங்கிகள், தற்போது டிஜிட்டல் சேவைகள், வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் வட்டி விகிதங்களில் தனியார் வங்கிகளுக்கு இணையான போட்டியை வழங்கி, சந்தை பங்கை அதிகரித்து வருகின்றன. இருப்பினும், நிறுவன முதலீட்டாளர்களின் போர்ட்போலியோக்களில் இன்னும் தனியார் வங்கிகளுக்கே முன்னுரிமை உள்ளது. பல மியூச்சுவல் பண்டுகளில், முக்கிய முதலீடாக தனியார் வங்கிகள் இருப்பதால், அவற்றில் விற்பனை அழுத்தம் அதிகமாக உள்ளது. மேலும், ரூபாய் பலவீனம் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் முதலீட்டை குறைத்ததும் தனியார் வங்கிப் பங்குகளை அதிகமாக பாதித்துள்ளது. சந்தை சரிவில் இருந்தாலும், சில துறைகள் மட்டும் வளர்ச்சியை காணும். கடந்த 12 மாதங்களில் பொதுத்துறை வங்கிகளை அடிப்படையாக கொண்ட இ.டி.எப்.,கள் 40 சதவீத வருமானம் வழங்கியுள்ளன. எனவே, முதலீ ட்டா ளர்கள் போர்ட்போலி யோவில் பொதுத்துறை வங்கிகளுக்கும் இடமளிக்கலாம். அதே நேரத்தில், சந்தை சுழற்சி மாறக்கூடும் என்பதால், தனியார் வங்கிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டியதில்லை. இவ்வாறு தெரிவித்தார். இந்திய பங்குச் சந்தையை தாங்கிப் பிடிக்கும் மிகப்பெரிய 'யானைகளாக' கருதப்படும் முன்னணி தனியார் வங்கிகள், அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை அழுத்தத்தால் நகர முடியாமல் தவிக்கின்றன வங்கிகள் ஈட்டி தந்த வருமானம் (கடந்த ஓராண்டில்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை