UPDATED : டிச 12, 2025 01:47 AM | ADDED : டிச 12, 2025 01:46 AM
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, நேற்று 90.48 என்ற இதுவரை இல்லாத வீழ்ச்சியை சந்தித்தது. உலகளவில் டாலரின் மதிப்பு குறைந்திருந்தாலும், ரூபாயின் மீது அழுத்தம் நீடித்தது. பணப் புழக்கத்தை நிர்வகிக்க, ரிசர்வ் வங்கி, சந்தையில் 50,000 கோடி ரூபாய் மதிப்பில் அரசு பத்திரங்களை கொள்முதல் செய்தது. ஏற்கனவே எதிர்பார்த்தது போல, அமெரிக்க பெடரல் வங்கி, தொடர்ந்து மூன்றாவது முறையாக வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 3.50-3.75 சதவீதம் என்ற வரம்புக்குள் கொண்டு வந்துள்ளது.
வட்டி குறைப்பு அறிவிப்புக்குப் பிறகு, பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவல் பேசியது டாலரை பலவீனப்படுத்தியது. குறிப்பாக, வட்டி விகித உயர்வு அடுத்த நடவடிக்கை அல்ல என்றும்; தொழிலாளர் சந்தை பலவீனமடைகிறது என்றும் அவர் கவலை தெரிவித்தார். இதனால், டாலர் குறியீடு 99.00லிருந்து 98.60ஆக சரிந்தது. டாலர் பலவீனமடைவது ரூபாய்க்கு சாதகமானது. அமெரிக்கா - இந்தியா வர்த்தக பேச்சில், இந்தியா தற்போது அளித்திருக்கும் சலுகையே, இதுவரை அமெரிக்காவுக்கு கிடைத்ததில் மிகச் சிறந்தது என அந்நாட்டு வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளது சாதகமான செய்தி. இதனால், இந்திய சந்தைகளை, அமெரிக்கா அணுகுவது அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். இது உறுதியானால், புவிசார் அரசியல் அழுத்தங்கள் குறைந்து, இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவளிக்கும். தற்போதைக்கு, ரூபாய் மதிப்பு 89.20-90.50 என்ற வரம்புக்குள் வர்த்தகமாக வாய்ப்புள்ளது.