உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  பண்டமென்டல் அனாலிசிஸ் : சவால்களுடன் முன்னேறி செல்லும் ஐ.டி.சி.,

 பண்டமென்டல் அனாலிசிஸ் : சவால்களுடன் முன்னேறி செல்லும் ஐ.டி.சி.,

கடந்த 1910ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது ஐ.டி.சி., நிறுவனம், துவக்க காலத்தில் சிகரெட் மற்றும் புகையிலை தொடர்பான என்று அறியப்பட்ட இந்நிறுவனம், பல்வேறு துறைகளில் கால் பதித்து, இன்று இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ந்துள்ளது. சிகரெட் உள்நாட்டு சிகரெட் சந்தையில் இந்நிறுவனம் 80 சதவீதத்தை வைத்து உள்ளது. மிக வலிமையான பிராண்டுகள், சிறந்த வினியோகத் திறன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என எல்லாவற்றிலும் சிறந்து இயங்குவதால், இந்த சந்தையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபத்தில் 78 சதவீதம் சிகரெட் விற்பனை வாயிலாக வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த வரியால், சிகரெட் விற்பனை, சமீபகாலமாக சவால்களை சந்தித்து வந்தது. தற்போது, முறைகேடான சிகரெட் விற்பனையை ஒழுங்குபடுத்தும் வகையில் அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், சட்டபூர்வமாக இயங்கிவரும் நிறுவனங்களுடைய சிகரெட் விற்பனை அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், சிகரெட் விற்பனை வருமானம், கடந்த நிதியாண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 6.70 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. எப்.எம்.சி.ஜி., ஆஷிர்வாத், சன்பீஸ்ட், யப்பி, பியாமா, பிங்கோ, கிளாஸ்மேட், மங்கள்தீப் என, இந்நிறுவனத்தின் 25 முன்னணி பிராண்டு பொருட்கள், 25 கோடிக்கும் அதிகமான வீடுகளை சென்றடைகின்ற ன. கடந்த நிதியாண்டு இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் இத் துறையில் 6.90 சதவீத வளர்ச்சியை அடைந்து, 5,960 கோடி ரூபாயாகஉள்ளது. ஸ்டேஷனரி மற்றும் கல்வி சார்ந்த தயாரிப்புகள் தொடர்ந்து சவால்களை சந்தித்து வருகின்றன. குறைந்த விலையிலான பேப்பர்களை இறக்குமதி செய்வது மற்றும் பிராந்திய நிறுவனங்களுடன் போட்டி போன்றவற்றால், நிறுவனத்தின் இந்த வணிகப் பிரிவு, சவால்களை சந்தித்து வருகிறது. நோட்டு புத்தகங்களை தவிர, இந்த பிரிவின் வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் வளர்ச்சியை அடைந்துள்ளது. ஜி.எஸ்.டி., வரி குறைப்பு, மூலப்பொருட்கள் விலையில் நிலைத்தன்மை, தேவை அதிகரித்தல் ஆகியவற்றால் இந்தத் துறை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேப்பர் பேக்கேஜிங் பேப்பர் மற்றும் பேப்பர்போர்டு தயாரிப்பில், தொழில்நுட்ப ரீதியாகவும், இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாகவும் ஐ.டி.சி., உள்ளது. இந்த வணிகப் பிரிவின் வருவாய், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 5 சதவீத வளர்ச்சியடைந்து, 2,220 கோடி ரூபாயாக உள்ளது. இந்தப் பிரிவின் இ.பி.ஐ.டி., வரம்பு 8.60 சதவீதமாக உள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 284 புள்ளிகள் குறைவு. குறைந்த விலையில் இறக்குமதி, மர விலை உயர்வு போன்றவற்றால் வருமான வளர்ச்சி மந்த நிலையிலேயே இருந்தது. ஒழுங்குமுறை நிலைபாட்டால், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், மல்டி லேயர் பேப்பர்போர்டுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சீனா மற்றும் சிலி போன்ற நாடுகளுக்கு, இறக்குமதி வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இலகுவான சூழல் உருவாகி உள்ளது. விவசாய தொழில்கள் புகையிலை, காபி, பதப்படுத்தப்பட்ட பழங்கள், கடல் பொருட்கள் உள்ளிட்டவற்றை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு 30 லட்சம் டன் அளவிலான பொருட்களை, 22 மாநிலங்களிலும், 20க்கும் அதிகமான வேளாண் மதிப்பு கூடங்களிலும் விற்பனை செய்து வருகிறது. இப்பிரிவு வருவாய், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 31.20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இதற்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி குறைவு, அமெரிக்க வரி விதிப்பு, வாடிக்கையாளர்கள் தங்களது ஆர்டர்களை தாமதப்படுத்தியது ஆகியவையாகும். குறுகிய கால நோக்கில், பல்வேறு புறக்காரணிகளால் இந்தப் பிரிவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டாலும்; நடுத்தர கால அடிப்படையில், வேளாண் பிரிவு தொழில் வலுவாக உள்ளது. வேளாண் பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் ஆகிய பிரிவுகளில், தொடர் வருமானம் குறுகிய கால வளர்ச்சியை ஊக்குவித்து வந்தாலும், இந்த தொழில்களின் சுழற்சி தன்மை காரணமாக, அதன் நிலைத் தன்மையை தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமானதாகும். ஹோட்டல்கள் நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனம் தன் ஹோட்டல் தொழிலை பிரித்து, தனி நிறுவனமாக 'ஐ.டி.சி., ஹோட்டல்ஸ் லிமிடெட்' என்று பட்டியலிட்டுள்ளது. இதன் 40 சதவீத பங்குகளை, தன் வசம் வைத்துள்ளது. ஐ.டி., தொழில்கள் ஐ.டி.சி., நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையிலும் இயங்கி வருகிறது. வங்கி மற்றும் நிதிச் சேவைகள், ஹெல்த்கேர், உற்பத்தித்துறை, நுகர்பொருட்கள், சுற்றுலா மற்றும் மருத்துவமனை சேவைகள் போன்றவற்றில் 'ஐ.டி.சி., இன்போடெக்' இயங்கி வருகிறது. சந்தை மதிப்பு இந்நிறுவனத்தின் ஹோட்டல் தொழில் தனியாகப் பிரிக்கப்பட்டு விட்டதால், நிறுவனத்தின் வளர்ச்சி, சிகரெட் தொழில் மற்றும் எப்.எம்.சி.ஜி., தொழிலை நோக்கியுள்ளது. சிகரெட் வணிகப்பிரிவில் முன்னணி சந்தையை தொடர்ந்து நிலைநிறுத்துதல், எப்.எம்.சி.ஜி., பிரிவில் படிப்படியான வளர்ச்சி மற்றும் லாபத்திறன் மேம்பாடு ஆகியவை, சந்தை மதிப்பு உருவாக்கத்தின் முக்கிய காரணிகளாக உள்ளன. நடுத்தர கால நோக்கில் தன் அனைத்து வணிகங்களிலும் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்து, கட்டமைப்பு அடிப்படையிலான போட்டியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது 2026- - 27ம் நிதியாண்டில் எதிர்பார்க்கும் ஒரு பங்குக்கான (இ.பி.எஸ்.,) லாபத்தை விட 22 மடங்கு (பி.இ., குறியீடு) என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இது, 10 ஆண்டுகளின் சராசரியை ஒட்டியுள்ளது. ரிஸ்க் எப்.எம்.சி.ஜி., துறையில் போட்டித்தன்மை நீடிக்கிறது. மேலும் சிகரெட் தொழிலைப் பொறுத்தவரை, வரி உயர்வு போன்ற ஒழுங்குமுறை அபாயங்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ