உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / பண்டமென்டல் டேபிள்:நிலையான வளர்ச்சி பாதையில் சன் பார்மா

பண்டமென்டல் டேபிள்:நிலையான வளர்ச்சி பாதையில் சன் பார்மா

நிலையான வளர்ச்சி பாதையில் சன் பார்மா

மருந்துகள் உற்பத்தி துறையில், இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம் சன் பார்மசூட்டிக்கல்ஸ். இந்திய மருந்து துறையில் 8.20 சதவீத சந்தையை தன் வசம் வைத்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் முன்னணி நிறுவனமாக இது உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க சந்தையை வைத்துள்ளது. ஜெனரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள் மற்றும் ஸ்பெஷாலிட்டி மருந்துகள் என, அனைத்து வகையிலும் இந்நிறுவனம் குறிப்பிடத்தக்க இடத்தை கொண்டுள்ளது.

ஸ்பெஷாலிட்டி மருந்துகள்

ஜெனரிக் மருந்துகளை பொறுத்தவரை, இவை அதிகளவு விற்பனையாகக்கூடிய மருந்துகள். ஆனால், விலை ரீதியான போட்டி அதிகமாக இருக்கிறது. போட்டி நிறுவனங்கள் இதே மூலக்கூறுடைய ஜெனரிக் மருந்துகளை அறிமுகப்படுத்தும் போது, நிறுவனத்தின் லாப வரம்பு குறைகிறது. தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய்க்கான மருந்துகள், உடல் பருமனுக்கான மருந்துகள் போன்றவை ஸ்பெஷாலிட்டி மருந்துகளாக கருதப்படுகிறது. இந்த மருந்துகளை பொறுத்தவரை, அதிக லாப வரம்பு உடையவை. மேலும் இந்த வகை மருந்துகளுக்கு போட்டி குறைவாகவே இருக்கும். தற்போது சன் பார்மா, ஜெனரிக் மருந்துகளிலிருந்து, நிலையான வளர்ச்சி தருகின்ற ஸ்பெஷாலிட்டி மருந்துகள் தயாரிப்பை நோக்கி மாற்றி வருகிறது. சமீப காலாண்டு முடிவுகளில் நிறுவனத்தினுடைய ஒட்டுமொத்த வருவாயில் 19 -20 சதவீதம் வரை ஸ்பெஷாலிட்டி மருந்துகளின் பங்களிப்பு உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் ஸ்பெஷாலிட்டி மருந்துகள் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அளித்து வருகிறது. அமெரிக்காவில் நிறுவனத்தின் மொத்த விற்பனை மதிப்பு, ஒரு காலாண்டில் 464 மில்லியன் டாலர். இதில் 266 மில்லியன் டாலர் விற்பனை ஸ்பெஷாலிட்டி மருந்துகள் பிரிவிலிருந்து வருகிறது. இதிலிருந்து, அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் சந்தை ஜெனரிக் மருந்துகளிலிருந்து ஸ்பெஷாலிட்டி மருந்துகளுக்கு மாறி வருவதை காண முடிகிறது.

சமீபத்திய முதலீடுகள்

ஸ்பெஷாலிட்டி மருந்து தயாரிப்பில் மிகவும் குறிப்பிடத்தக்க நிறுவனங்களை சன் பார்மா கையகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவைச் சேர்ந்த 'செக்பாயின்ட் தெரபேட்டிக்ஸ்' நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. செக்பாயின்ட் தெரபேட்டிக்ஸ் புற்றுநோய் தொடர்பான மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்த கையகப்படுத்துதல் வாயிலாக செக்பாயின்ட் நிறுவனத்தின் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்பட்ட தோல் புற்றுநோய் மருந்தான அன்லாக்ஸிட் சன் பார்மாவின் தயாரிப்பில் இணைகிறது. இதன் வாயிலாக, சன் பார்மா அதிக லாப வரம்பு உடைய ஸ்பெஷாலிட்டி மருந்துகளில் தங்களது மூலதனத்தை செலவிடுவது உறுதியாகிறது.கடந்த 2023 ஜனவரியில் தலைமுடி உதிர்தல் சம்பந்தமான டெரூக்சோலிடினிப் மருந்து தயாரிக்கும் கான்செர்ட் பார்மசூட்டிக்கல் நிறுவனத்தை கையகப்படுத்தியது.கடந்த ஆண்டு ஜூன் மாதம், இஸ்ரேலை சேர்ந்த மருந்து தயாரிப்பு மற்றும் ஆய்வு நிறுவனமான டாரோ நிறுவனத்தையும் கையகப்படுத்தியது. இந்த நிறுவனங்களை கையகப்படுத்திய பிறகும் சன் பார்மாவின் நிதிநிலை அறிக்கையில் உள்ள நிகர ரொக்க கையிருப்பு 27,000 கோடி ரூபாயாக உள்ளது.

இந்திய சந்தை@

@இந்திய சந்தையில், கிட்டத்தட்ட 8.10--8.30 சதவீத சந்தையை தன்வசம் வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்திய மருந்து சந்தையை விட, சன் பார்மா அதிக வளர்ச்சியை அடைந்து வருகிறது. சமீபத்திய காலாண்டு முடிவுகளில், உள்நாட்டு சந்தையின் விற்பனை வளர்ச்சி, இரட்டை இலக்கத்தில் இருந்து வருகிறது. இது நிறுவனத்துக்கு மிகவும் சாதகமான அம்சமாகும்.

ஏன் இந்தியா முக்கியம்?

ஒரு வலுவான மற்றும் அதிக வளர்ச்சியடைந்து வரும் சந்தையாக சன் பார்மாவுக்கு இந்திய சந்தை உள்ளது. இதன் வாயிலாக ரொக்கத்தொகை, உற்பத்தி வளர்ச்சி, விற்பனைப்பிரிவு வளர்ச்சி ஆகியவை இந்நிறுவனத்துக்கு சாதகமாக அமைகிறது. இதனால் உள்நாட்டிலும் சர்வதேச சந்தையிலும் ஸ்பெஷாலிட்டி மருந்துகள் தயாரிப்பிலும் கையகப்படுத்துதலிலும் அதிகமாக கவனம் செலுத்த முடிகிறது.

அமெரிக்க வரியால் பாதிப்பு?

சமீபத்தில் அமெரிக்கா பிராண்டட் மருந்துகளுக்கு 100% இறக்குமதி வரி விதித்துள்ளது. இதனால் சன் நிறுவனத்தின் விற்பனையில் தாக்கம் ஏற்படக்கூடும். ஏனெனில், அதன் மொத்த விற்பனையில் சுமார் 20% பிராண்டட் மருந்துகளே உள்ளன. ஆனால், சன் தனது சிறப்பு மருந்து உற்பத்தியை, ஐரோப்பாவுக்கு அவுட்சோர்ஸ் செய்து வருவதால், அதன் மீது ஏற்படும் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்நிறுவனம் 2026--27ம் நிதியாண்டில் எதிர்பார்க்கும், ஒரு பங்குக்கான லாபத்தை விட 28 மடங்கு என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இது நீண்டகால 'மீடியன் பி.இ., மடங்கு' அளவில் உள்ளது. தொழில் வளர்ச்சி, வலுவான நிதிநிலை அறிக்கை மற்றும் உள்நாட்டில் முன்னணி நிறுவனம் என அடிப்படையில் வலுவாக சன் பார்மா உள்ளது. நீண்ட கால நோக்கில் முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தை கவனத்தில் கொள்ளலாம்.நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்- 20-19 2020 2021 20-22 20-23 2024 2025 விற்பனை 29,066 32,838 33,498 38,654 43,886 48,497 52,578 தொழில் நடவடிக்கையில் கிடைத்த லாபம் 6,377 6,983 8,470 10,258 11,650 13,018 15,114 வரி செலுத்திய பின் உள்ள லாபம் 3,208 4,172 2,272 3,389 8,513 9,610 10,965 தொழில் நடவடிக்கையில் இருந்து பெற்ற ரொக்கத்தொகை 2,196 6,555 6,170 8,985 4,959 12,135 14,072 ஆர்.ஓ.சி.இ (%) 10 10 13 17 16 17 20 ஆர்.ஓ.என்.டபுள்யு (%) 8 9 5 7 15 15 15 விலை/ புத்தக மதிப்பு (மடங்குகளில்) 2.8 2.1 3.1 4.4 4.9 6.2 5.8 பங்கு விலை/ வருமான விகிதம் (மடங்குகளில்) 43.1 21.56 48.53 66.15 27.83 40.61 38.08 == ஆர்.ஓ.சி.இ., -- நிறுவனம் செய்த முதலீட்டில் இருந்து பெற்ற லாபம் ஆர்.ஓ.என்.டபுள்யு - நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பில் பெற்ற லாபத்தின் அளவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !