லஞ்ச பணத்தில் பங்கு வாங்கி லாபம் பார்த்தால் அதுவும் குற்ற செயலின் வருமானமே -டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு
ல ஞ்சமாக பெறப்பட்ட பணத்தை பங்குகள் அல்லது பிறவற்றில் முதலீடு செய்து கிடைத்த லாபம் உட்பட முழுத் தொகையும், 'குற்றச் செயலின் வருமானம்' என்றே கருதப்படும் என, டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 'பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ்' எனும் நிறுவனம், சட்டவிரோதமாக பதேபூர் நிலக்கரி சுரங்கத்தை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிகாரப்பூர்வ ஒதுக்கீடு வருவதற்கு முன்பே, மும்பை பங்குச் சந்தையிடம், ஏற்கனவே ஒதுக்கீடு கிடைத்துவிட்டதாக கூறியதால், இந்நிறுவன பங்குகள் திடீரென உயர்ந்தன. இந்நிலையில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு, நிறுவனம் அந்த பங்குகளை விற்று 122.74 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாகக்கூறி, அவற்றை இடைக்காலமாக முடக்க, அமலாக்கத் துறை உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து, அமலாக்கத் துறை டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கை சரியானதுதான் என டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. சட்டவிரோதமாக பெற்ற சொத்துகளை, பங்குகள், ரியல் எஸ்டேட் என எதில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டினாலும், அவை அனைத்தும் குற்ற வருமானமே என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.