காப்பீடு என்பது மர்மமானது; அச்சமூட்டுவது, கூடவே சிறிது மனச்சோர்வை ஏற்படுத்துவது என, பலர் நினைக்கின்றனர். ஆனால், அது அவசியமானது, பயனுள்ளது, சில சந்தர்ப்பங்களில் கட்டாயமானதும்கூட.
இந்த 'நிழலும் நிஜமும்' பகுதியில், காப்பீடைப் பற்றிய தவறான புரிதல்களை ஆராய்ந்து, குழப்பங்களைத் தெளிவுபடுத்தி, சரியான அணுகுமுறைகளைப் பார்க்கலாம். காப்பீடு எப்படி வாங்குவது, அதை எப்படி பராமரிப்பது, எப்போது எவ்வாறு க்ளெய்ம் செய்வது என்பதையும் பார்க்கலாம். முதலில், எல்லாரும் நம்பும் ஒரு விஷயத்தைப் பற்றி பார்க்கலாம்... சிவப்பு நிற காருக்கு காப்பீட்டு பிரீமியம் அதிகம். இது நிழலா? நிஜமா? நிழல் தான். இது ஒரு தவறான நம்பிக்கை. இந்தக் கதை எங்கு தோன்றியது என்று தெரியவில்லை. யூகம் என்று சொல்ல முடியும். இது ஒருவேளை கம்ப்யூட்டர் முறையில் காப்பீடு மதிப்பீடுகள் உருவாக்கப்படும் போது, நிறைய பரிமாணங்களை கருத்தில் கொண்டு, வேலை செய்யும் முறையைப் பொறுத்து, தவறாக உருவான ஒரு நம்பிக்கையாகக்கூட இருக்கலாம். காப்பீடு நிறுவனங்கள், பிரீமியம் விகிதத்தை தீர்மானிக்கும்போது, வாகன வகை, வாகனத்தின் பயன்பாடு, வாகனம் பயன்படுத்தப்படும் இடங்கள் / புவியியல் பகுதிகள், பல்வேறு காரணிகளால் உருவான வாகனங்களின் க்ளெய்ம் வரலாற்று புள்ளி விபரங்கள் என பல விஷயங்களை ஆராய்ந்து முடிவெடுக்கின்றன. ஒருவேளை, பளிச்சென்ற சிவப்பு கார்களை விரும்பும் இளம் தலைமுறையினருக்கு, அடிக்கடி விபத்துகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் என எங்காவது ஒரு செய்தி அல்லது பாப் சைக்காலஜி விபரங்கள் வந்திருக்கலாம். அதிலிருந்து தவறான கட்டுக்கதை உருவாகி இருக்கலாம் - 'சிவப்பு கார் என்றாலே பிரீமியம் அதிகம்' என்று! நிஜம் என்னவென்றால், வாகனத்தின் நிறத்துக்கும் காப்பீடு பிரீமியத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இந்த நிழல் பற்றிய யூகங்கள் அல்லது நம்பத்தகுந்த தகவல்கள் இருப்பின், வாசகர்கள் பகிரலாம். அது மற்ற வாசகர்களுக்கும் பயனளிக்கும்.
சரி, வாகனக் காப்பீட்டு பிரீமியம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? பிரீமியம் பல காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது: காரின் என்ஜின் திறன் அதன் வயது எந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது எதற்கு பயன்படுத்தப்படுகிறது மற்றும், முக்கியமாக, அதன் மதிப்பு இவை ஒவ்வொன்றும் மதிப்பீடு செய்யப்பட்டு, பிரீமியக் கணக்கீட்டில் பயன்படுத்தப் படும். உதாரணமாக 1,200 சிசி காருக்கு, 2,000 சிசி காரைவிட குறைந்த பிரீமியம் இருக்கும். புதிய கார்கள், பழையவையை விட குறைவான விகிதத்தில் பிரீமியம் பெறும். வாகனத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும் காப்பீடுத் தொகையை, ஐ.இ.வி., அதாவது 'காப்பீடு செய்யப்பட்ட சொத்தின் மதிப்பு' என்று அழைப்பர். ஐ.இ.வி., அதிகமாக இருந்தால், பிரீமியமும் அதிகமாகும். இதே மாதிரி, தனிப்பட்ட பயன்பாட்டுக்கான கார், வணிக பயன்பாட்டுக்கான அதே காரை விட குறைந்த பிரீமிய விகிதம் பெறும். வணிக வாகனங்களுக்கு ஒரு தனி மதிப்பீட்டு முறை உள்ளது.
நோ க்ளெய்ம் போனஸ்
தனிப்பயன் கார் காப்பீடில், க்ளெய்ம் செய்யாமல் ஓர் ஆண்டு கடந்து விட்டால், அது புதுப்பிக்கப்படும் போது, பிரீமியம் தள்ளுபடி கிடைக்கும். இதை 'நோ க்ளெய்ம் போனஸ்' என அழைப்பர். க்ளெய்ம் செய்யாமல் கடந்தால், இது ஆண்டுக்காண்டு அதிகரித்து, ஒரு வரம்பு வரை செல்லும். நான்காவது ஆண்டில் ஒரு க்ளெய்ம் வந்தால், அந்த நோ க்ளெய்ம் போனஸ், மீண்டும் முந்தைய ஆண்டு நிலைக்குத் தள்ளப்படலாம். உங்கள் காப்பீட்டு நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, சில சமயங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு, அல்லது முழுமையாக ரத்தாகிவிடலாம். அதனால், சிறிய தொகைக்காக க்ளெய்ம் செய்வதற்கு முன், நீங்கள் இழக்கும் நோ க்ளெய்ம் போனஸ் மதிப்பை யோசித்து பார்த்து, எது லாபகரமானது என்பதை முடிவு செய்யுங்கள். போனஸுக்கு இன்னொரு போனஸ் செய்தி: நீங்கள் உங்கள் காரை விற்கும்போது, அதில் இருந்த நோ க்ளெய்ம் போனஸை, நீங்கள் வாங்கப் போகும் புதிய காரில் தொடர முடியுமா? ஆம், முடியும். உங்களின் காப்பீடு நிறுவனத்திடம் இருந்து ஒரு நோ க்ளெய்ம் போனஸ் சான்றை பெற்றுக் கொள்ளுங்கள். பிறகு புதிய கார் வாங்கும்போது, அதற்கு காப்பீடு எடுக்கும்போது இந்த போனஸை பயன்படுத்த முடியும்.க.நித்ய கல்யாணிகாப்பீடு குறித்த நிபுணத்துவ எழுத்தாளர், பெருநிறுவன வரலாற்றாசிரியர்