| ADDED : நவ 20, 2025 01:04 AM
ந ம் நாட்டில் முதலீட்டாளர்கள் தற்போது நீண்டகால இலக்குகளுடன் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யும் உத்தியைப் பின்பற்றி வருவதாக, 'மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரி வித்துள்ளதாவது: சந்தை குறியீட்டை பின்பற்றும் 'பேஸிவ்' பண்டுகளில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இந்திய முதலீட்டாளர்கள் குறுகிய கால லாபத்தைவிட, நீண்ட கால இலக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதே இந்த மாற்றத்திற்கு காரணம். மியூச்சுவல் பண்டுகளின் காலாண்டு சொத்து மேலாண்மையில், பேஸிவ் பண்டுகளின் பங்கு, 2020ஆம் நிதியாண்டில் 7 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டின் செப்டம்பரில் 17.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான காலத்தில், இ.டி.எப்., மற்றும் இண்டெக்ஸ் பண்டுகள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, முறையே 28 சதவீதம் மற்றும் 81 சதவீதம் என்ற ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்துள்ளன. அதேநேரம், மொத்த பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 28 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. பேஸிவ் பண்டுகளில் முதலீடு என்பது தற்போது ஒரு நிரந்தர வளர்ச்சிக்குள் வந்துவிட்டது. குறிப்பாக, 2025ம் நிதியாண்டு ஒரு 'பிரேக்அவுட்' ஆண்டாக அமைந்தது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது. பேஸிவ் பண்டுகள் இவற்றில் முதலீடு செய்வதற்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது சந்தையின் ஏற்ற இறக்கங்களை பிரதிபலிக்கும்; சந்தை உயரும்போது லாபம் அதிகரிக்கும் பண்டில் உள்ள அனைத்து பங்குகளிலும் ஒரே நேரத்தில் முதலீடு செய்ததாக அர்த்தம் ஒரு சில நிறுவன பங்குகள் மோசமாக இருந்தாலும், ஒட்டுமொத்த போர்ட்போலியோவில் தாக்கம் குறைவாக இருக்கும் முதலீடுகள் அதிக வெளிப்படைத்தன்மையுடனும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கும்