வெள்ளி விலை வீழ்ச்சி தற்காலிகமானதா?
சர்வதேச அளவில் நிகழும் பொருளாதார, அரசியல் பதற்றங்கள் காரணமாக, தங்கம், வெள்ளி விலை புதிய உச்சத்தை தொட்டு வந்தன. குறிப்பாக, ராக்கெட் வேகத்தில் வெள்ளி விலை உயர்ந்து வந்த நிலையில், நேற்று இந்திய இ.டி.எப்., சந்தையில் கடும் சரிவை சந்தித்தது.வெள்ளி சார்ந்த இ.டி.எப்., பண்டுகள் 20 சதவீதம் வரை சரிந்து, முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு, சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு வலுவடைந்தது, கிரீன்லாந்து விவகாரங்கள் தொடர்பான பதற்றங்கள் சற்று தணிந்தது போன்றவற்றால், முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததே வெள்ளி விலை சரிய காரணமாக கூறப்படுகிறது.
தங்கம் விலை மேலும் உயரும்
கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு ஏற்றவாறு தங்கம், வெள்ளியில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயல்பான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில், நடப்பாண்டின் இறுதியில், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 5,400 அமெரிக்க டாலர்களாக உயர்வு காண வாய்ப்புள்ளதாக தர ஆய்வு நிறுவனமான 'கோல்டுமேன் சாக்ஸ்' கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில், 8 கிராம் தங்கம் விலை கிட்டத்தட்ட 1.28 லட்சம் ரூபாயை எட்ட வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது கையிருப்பை தங்கமாக மாற்றுவதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோல்டு இ.டி.எப்., திட்டத்தில் ரூ.43,000 கோடி முதலீடு
கடந்த 2025ம் ஆண்டு இந்திய மியூச்சுவல் பண்டு வரலாற்றில், தங்கத்திற்கு ஒரு பொற்காலமாக அமைந்தது. பங்குச் சந்தையில் நிலவிய மந்தநிலை காரணமாக, 43,000 கோடி ரூபாயை இந்தியர்கள் கோல்டு இ.டி.எப்.,களில் முதலீடு செய்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 11,600 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்வாயிலாக, உலகளாவிய கோல்டு இ.டி.எப்., சந்தையில் இந்தியாவின் பங்கு 2.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.