மேலும் செய்திகள்
ஃபோரக்ஸ்: இரண்டு நாள் இறக்கத்துக்கு பின் ஏற்றம்
10-Dec-2025
தொடர் சரிவை சந்தித்து வந்த ரூபாயின் மதிப்பு, கடந்த இரு நாட்களாக நிலைத்தன்மையுடன் காணப்பட்டது. இது, முதலீட்டாளர்களிடம் நிலவிய அச்சத்தை போக்கி, சந்தையில் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.ரூபாய் மதிப்பு சரிவதை தடுக்க ரிசர்வ் வங்கி, சந்தையில் டாலர்களை விற்பனை செய்தது. ரிசர்வ் வங்கியின் பல்வேறு நடவடிக்கைகள், ரூபாய் மதிப்புக்கு பலம் சேர்த்துள்ளன. குறிப்பாக, சந்தையில் போதிய ரூபாய் புழக்கத்தை உறுதி செய்வதன் வாயிலாக, வங்கிகள் டாலர்களை கையாள்வது எளிதாகிறது.இது டாலருக்கான தட்டுப்பாட்டை குறைத்து, ரூபாய் மதிப்பு மீண்டும் உயர வழிவகுக்கிறது. தற்காலிகமாக ரூபாய் மதிப்பு மீண்டிருந்தாலும், சில சவால்கள் இன்னும் நீடிக்கின்றன. அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இன்னும் தெளிவு கிடைக்காதது, சந்தையில் ஒருவிதத் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.உலக சந்தையில், டாலர் குறியீடு 98.50ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க அவசரம் காட்டாதது, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நாணயங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.தற்போதைய நிலவரப்படி, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90.00 என்ற அளவில் வலுவான ஆதரவை பெற்றுள்ளது. ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பால், வரும் நாட்களில் ரூபாய் மதிப்பு பெரிய வீழ்ச்சியை சந்திக்காமல், நிலைத்தன்மையுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10-Dec-2025