கடன் பத்திரங்கள் வெளியிடும் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்
பொதுத் துறையை சேர்ந்த, 'பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்' நிறுவனம், கடன் பத்திரங்கள் வாயிலாக, 5,000 கோடி ரூபாய் நிதி திரட்டுவதாக அறிவித்துள்ளது. இந்த கடன் பத்திரங்களை வாங்க, ஜனவரி 16 முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 6.85 முதல் 7.30 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கடன் பத்திரங்களுக்கு 'கேர், கிரிசில், இக்ரா' ஆகிய ஆய்வு நிறுவனங்கள், 'ஏஏஏ' (ஸ்டேபில்) தர மதிப்பீட்டை வழங்கியுள்ளன. இந்த கடன் பத்திரங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரட்டப்படும் நிதியில் 75 சதவீதத்தை கடன் வழங்கவும், பழைய கடன்களை திருப்பிச் செலுத்தவும் பயன்படுத்தப்படும். மீதமுள்ள 25 சதவீத தொகை, இதர நிறுவன தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, முதலீட்டாளர்கள் அதிக வட்டி கேட்டு கோரிக்கை விடுத்ததால், கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மூன்று முறை கடன் பத்திரங்கள் வெளியிடும் முடிவை இந்நிறுவனம் திரும்பப்பெற்றது. இந்நிலையில், தற் போது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப புதிய வட்டியை அறிவித்துள்ளது.