| ADDED : டிச 02, 2025 01:06 AM
அ மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று வரலாறு காணாத சரிவை சந்தித்தாலும், 89.80 என்ற வரம்புக்கு கீழே உறுதியாக தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தாமதமாவது, முதலீட்டு வரத்து குறைவு போன்றவையே காரணங்கள். ஜூலை - செப்., வரை யிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஆறு காலாண்டுகளில் இல்லாத வேகமான வளர்ச்சி ஆகும். ஜி.எஸ்.டி., குறைப்பின் முழு பலன்கள் இன்னும் வர துவங்காத நிலை யிலும், அமெரிக்காவின் தடைகள் இருந்தபோதிலும் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மிகவும் உற்சாகமளிக்கிறது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை காரணிகள் உறுதியாக இருப்பதாக முதலீட்டாளர்கள் நம்புவதற்கு, வலுவான உள்நாட்டு வளர்ச்சியே காரணம். ரூபாய் மதிப்பு சரிவடையாமல் இருக்க ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமெரிக்காவில் தொழிலாளர் சந்தை தணிந்து வருவதாக பொருளாதார தரவுகள் சுட்டிக்காட்டுவதால், அமெரிக்க டாலர் இந்த வாரம் சரிந்தது. அந்நாட்டின் பெடரல் வங்கி, வட்டி விகிதங்களை விரைவில் குறைக்க வேண்டியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் வலுப்பெற்றுள்ளது. டிசம்பர் 9--10ம் தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் வட்டி விகித குறைப்புக்கான வாய்ப்பு 87 சதவீதமாக உயர்ந்துள்ளது. டாலர் பலவீனமடையும்போது, இந்திய ரூபாய் போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் நாணயங்களுக்கு சிறிது நிம்மதி கிடைக்கும். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 88.90-89.80 என்ற வரம்பிற்குள் வர்த்தகமாக வாய்ப்புள்ளது. இதில், 88.80-89.00 என்பது வலுவான ஆதரவு நிலையாக இருக்கும்.