கிரிப்டோ வர்த்தகத்தில் உ.பி., முதலிடம்
இந்தியாவில் 'கிரிப்டோ கரன்சிகள்' அங்கீகரிக்கப்படாத நிலையி லும், அந்த வர்த்தகத்தில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் இருப்பது 'காயின்ஸ்விட்ச் இந்தியா' நிறுவனத்தின் தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது. நாட்டின் மொத்த கிரிப்டோ வர்த்தகத்தில், உத்தர பிரதேசத்தில் 13 சதவீதமும்; மஹாராஷ்டிராவில் 12.1 சதவீதமும்; கர்நாடகாவில் 7.9 சதவீதமும் நடைபெற்றிருக்கிறது. முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் உத்தர பிரதேச மாநில முதலீட்டாளர்களின் விருப்ப தேர்வாக 'பிட்காயின்' உள்ளது. இதில், ஆச்சர்யமூட்டும் வகையில், சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள முதலீட்டாளர்கள்கூட கிரிப்டோ வர்த்தகத்தில் அதிக ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, மூன்று மற்றும் நான்காம் நிலை நகரங்கள் இணைந்து, கிரிப்டோ செயல் பாடுகளில் 43.40 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. இரண்டாம் நிலை நகரங்களில் 32.2 சதவீதம் பங்களிப்பை வழங்குகின்றன. மொத்த கிரிப்டோ 'ஹோல்டிங்க்ஸில்' பிட்காயின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து 'டோஜ்காயின், எத்திரியம்' உள்ளன. இந்தியாவில் கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களில் பெண்கள் 12 சதவீதம் மட்டுமே உள்ளனர். எனினும், ஆந்திரப் பிரதேசத்தில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக முதலீடு செய்கின்றனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.