எஸ்.பி.ஐ., நிதிநிலை முடிவுகள் வலுவாக இருந்தும் பங்குகள் சரிந்தது ஏன்? எஸ்.பி.ஐ., பங்குகளை வாங்கலாமா?
'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா'வின் ஜூன் காலாண்டு நிதி முடிவுகள் வலுவாக இருந்தபோதிலும், நேற்று பங்கு விலை 2.39 சதவீதம் சரிந்து 1,071 ரூபாயாக முடிந்தது. வங்கியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக நிதிநிலை முடிவுகள் வெளியான நிலையில், பங்கு விலை மட்டும் ஏன் சரிந்தது என்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், இதுபற்றி பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான 'எக்சிஸ்'நிறுவனர் வளர்முருகன் தெரிவித்ததாவது: காலாண்டு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே எஸ்.பி.ஐ., பங்கு உயர்ந்திருந்தது. முடிவுகள் வெளியானதும் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததால் விற்பனை அழுத்தம் ஏற்பட்டது. குறிப்பாக, 1,100 ரூபாய்க்கு மேல் சென்ற பங்கு அந்த நிலையை தக்கவைக்க முடியாமல் சரிந்தது. அதிக வர்த்தக அளவுடன் ஏற்பட்ட இந்த சரிவு, குறுகிய காலத்தில் பங்கில் சோர்வு ஏற்பட்டிருப்பதை காட்டுகிறது. தொழில்நுட்ப ரீதியாக 1,100 ரூபாய் என்பது முக்கியமான நிலையாக உள்ளது. 14 நாள் ஆர்.எஸ்.ஐ., 70ஐ சோதித்துவிட்டு தற்போது கிட்டத்தட்ட 60க்கு பின்வாங்கியுள்ளது. எனவே, 1,100 ரூபாய்க்கும் கீழ் பங்கு விலை நீடிக்கும் வரை குறுகிய காலத்தில் சற்று பலவீனமான போக்கு தொடர வாய்ப்புள்ளது. அதேநேரம், 1,113 ரூபாய்க்கும் மேல் ஒரு நாள் முடிவு ஏற்பட்டால் இந்த குறுகியகால பார்வை மாறக்கூடும்.