உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / யூலிப் காப்பீடு திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவையா?  

யூலிப் காப்பீடு திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவையா?  

முதலீடு அம்சம் கொண்ட யூலிப் காப்பீடு திட்டங்களை தேர்வு செய்யும் முன், இவை தொடர்பான தெளிவு இருக்க வேண்டும்.பல வகையான காப்பீடு திட்டங்களில், யூலிப்கள் முதலீடு அம்சம் கொண்ட ஒருங்கிணைந்த திட்டமாக அமைகின்றன. அண்மையில் யூலிப் திட்டங்களை விளம்பரம் செய்வது தொடர்பாக, காப்பீடு நிறுவனங்களுக்கு இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. யூலிப் திட்டங்களை முதலீடு சாதனங்கள் என்று விளம்பரம் செய்யக்கூடாது என்றும், இவற்றின் இடர் அம்சங்களை குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. யூலிப் காப்பீடு திட்டங்கள் தவறாக விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் வகையில் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

காப்பீடு திட்டம்

முதலீட்டாளர்களில் பலர் யூலிப் திட்டங்கள் தொடர்பாக சரியான புரிதல் இல்லாமல் முதலீடு செய்கின்றனர். யூலிப்கள் முதலீடு அம்சம் கொண்டிருந்தாலும், அடிப்படையில் இவை காப்பீடு திட்டங்களே என்பதை மனதில் கொள்ள வேண்டும்.யூனிட் இணைக்கப்பட்ட காப்பீடு திட்டமான யூலிப் தொகையில் ஒரு பகுதி காப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இன்னொரு பகுதி மியூச்சுவல் பண்ட்கள் வாயிலாக முதலீடு செய்யப்படுகின்றன. காப்பீடு பாதுகாப்பு அளிப்பதோடு, முதலீடு அம்சமும் கொண்டிருப்பதால், ஈர்ப்புடையதாக தோன்றினாலும், இந்த வகை திட்டங்கள் யாருக்கு பொருந்தும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.யூலிப்கள் ஐந்தாண்டு லாக் இன் காலம் கொண்டவை. எனவே, நீண்ட கால நோக்கிற்கான பணத்தை குறுகிய கால இலக்குகளுக்கு பயன்படுத்தும் தன்மை கொண்டவர்கள் அல்லது சம பங்கு நிதிகளில் முதலீடு செய்யும் போது சந்தை சூழலால் பதற்றம் அடைந்து முதலீட்டை விலக்கிக் கொள்பவர்கள், யூலிப் திட்டங்களை நாடலாம். யூலிப் பிரிமியம் குறிப்பிட்ட வரம்பிற்குள் இருந்தால் வரிச்சலுகையும் பொருந்தும். பிள்ளைகள் கல்வி போன்றவற்றுக்கு திட்டமிட இவை உதவலாம்.

பணமாக்கல் தன்மை

எனினும், யூலிப்களில் லாக் இன் காலத்தின் போது பணத்தை விலக்கிக் கொள்ள முடியாது. அவசர தேவைக்காக பணத்தை முதல் ஐந்து ஆண்டுகளில் எடுக்க முடியாது. மேலும், இந்த திட்டங்களில் இறப்பு அம்சத்திற்கான காப்பீடு கட்டணமும் உண்டு. வயதுக்கு ஏற்ப இது அதிகரிக்கும்.எனவே, வயதானவர்களை விட, குறைந்த வயது கொண்டவர்களுக்கு கிடைக்கும் பலன் அதிகமாக இருக்கலாம். முதலீடு அம்சம் மட்டும் கொண்ட திட்டங்களில் இந்த சிக்கல் இல்லை. யூலிப் திட்டம் தொடர்பான நிதி குறைந்த பலன் அளித்தால், அதிலிருந்து மாறிக்கொள்ளும் வாய்ப்பும் ஐந்தாண்டுகளுக்கு கிடையாது.பொதுவாக நீண்ட கால நோக்கம் கொண்டவர்களுக்கு யூலிப்கள் ஏற்றதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் முதலீட்டாளர்கள் பணமாக்கல் தன்மையின் தேவை, பிரிமியம் தொகை மற்றும் வரிச்சலுகை தொடர்பான மற்ற முதலீடுகளையும் கணக்கில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்.மேலும், இரண்டு வகையான யூலிப்கள் உள்ளன. முதல் வகையில், பாலிசிதாரர் எதிர்பாராத முடிவை சந்திக்கும் போது, நாமினிக்கு முதலீடு தொகை அல்லது பாதுகாப்பு தொகையில் எது அதிகமோ அது வழங்கப்படும். இரண்டாம் வகை திட்டத்தில் முதலீடு தொகை மற்றும் பாதுகாப்பு தொகை இரண்டும் கிடைக்கும்.முதலீட்டை முக்கியமாக கருதினால் முதல் வகை ஏற்றதாக இருக்கும். இந்த அம்சங்களை எல்லாம் கவனமாக பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ