மேலும் செய்திகள்
சார் - பதிவாளர் ஆபீசில் தேசியக்கொடி அவமதிப்பு
09-Aug-2024
மகுடஞ்சாவடி:மின் கட்டண உயர்வு, நுால் இறக்குமதி உள்ளிட்ட காரணங்களால், மகுடஞ்சாவடியில் உள்ள 'ஜின்னிங்' மில்களுக்கு நஷ்டமே மிஞ்சுவதால், பெரும்பாலானவை இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், ஏராளமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம், கொங்கணாபுரம் ஒன்றியம் மற்றும் ஆத்துார் பகுதிகளில், 120க்கும் மேற்பட்ட ஜின்னிங் மில்கள் செயல்படுகின்றன. இவற்றுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வேளாண் கூட்டுறவு விற்பனை மையங்களில் இருந்தும், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் பருத்தி கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், மின் கட்டணம், ஆள் கூலி, ஜி.எஸ்.டி., லாரி வாடகை, வாங்கிய கடனுக்கு வட்டி போன்ற பல பிரச்னைகளால், தொழில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. பல மில்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. மகுடஞ்சாவடி பருத்தி மற்றும் பஞ்சு வியாபாரிகள் சங்க நிர்வாகி எம்.துளசிலிங்கம், இது குறித்து கூறியதாவது:இப்பகுதியில், இத்தொழிலை நம்பி நேரடி, மறைமுகமாக, 5,000 பேர் உள்ளனர். மற்ற மாநிலங்களில் உள்ளது போல, தமிழக அரசு வரிச்சலுகை எதுவும் அளிப்பதில்லை. பல மடங்கு உயர்த்திய மின் கட்டணத்தால், மில்கள் இயங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.இதன் சார்பு தொழிலில் உள்ள தொழிலாளர்களும், மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டனர். பெரிய தொழிலதிபர்கள், கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் திண்டாடுகின்றனர். ஜி.எஸ்.டி., கூட கட்ட முடியவில்லை. நுாற்பாலைகளையே நம்பி உள்ளோம். ஆனால், நுால் விற்பனை போதியளவு இல்லாததால், எங்களுக்கு ஆலை அதிபர்கள், சரியான நேரத்துக்கு பணப்பட்டுவாடா செய்வதில்லை.இப்பகுதியில் அரசு சார்பில் நுாற்பாலைகள் அமைக்க நடவடிக்கை வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் மண்டல பருத்தி வியாபாரிகள் சங்க செயலர் எம்.குப்புசாமி கூறியதாவது:டிசம்பர் முதல் மார்ச்; ஜூலை முதல் ஆகஸ்ட் வரை என, ஆண்டுக்கு இரு சீசனில் மட்டும் ஜின்னிங் மில்கள் இயங்குகின்றன. இதனால் ஏராளமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள் மின் கட்டணத்தை குறைக்கவும், குறைந்த வட்டி அல்லது மானியத்தில் வங்கி கடன் வழங்கவும், ஜி.எஸ்.டி.,யை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2017ல் பதிவு செய்த, ஜி.எஸ்.டி.,க்கு தற்போது, 'நோட்டீஸ்' அனுப்புகின்றனர். இதனால் மன உளைச்சல் தான் ஏற்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
09-Aug-2024