இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 7% ஆக உயர்த்தியது உலக வங்கி
புதுடில்லி:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தன் கணிப்பை, உலக வங்கி அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், 6.60 சதவீத வளர்ச்சி ஏற்படும் என்று கணித்திருந்த நிலையில், அதை தற்போது 7 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டான 2024 - 25ல், இந்தியாவின் வளர்ச்சி 6.60 சதவீதமாக இருக்கும் என, கடந்த ஜூன் மாதத்தில் உலக வங்கி கணித்திருந்தது.இந்நிலையில், நேற்று அவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நடப்பு நிதியாண்டில், இந்திய விவசாயத் துறை வளர்ச்சி வேகமாக மீண்டிருக்கிறது. அதனால், கிராமப்புறங்களில் தேவை அதிகரித்திருக்கிறது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சி சவாலான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையிலும், இந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வலிமையாக உள்ளது.இந்தியாவில் பருவமழையின் முன்னேற்றம், தனிநபர் நுகர்வு ஆகியவை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான கணிப்பை, சாதகமான நிலையில் மறுஆய்வு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில், தெற்காசியாவிலேயே பொருளாதார வளர்ச்சியின் பெரும்பங்கை இந்தியா கொண்டிருக்கும்.இந்திய சேவைத் துறைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளதால், தயாரிப்பு துறையின் வளர்ச்சியின் மிதமான வளர்ச்சியை அது ஈடுகட்டுவதாக அமையும். விவசாயத் துறையின் மீட்சி, கிராமப்புற தனிநபர் நுகர்வையும் அதிகரித்து வருவதால், இந்தியாவின் பொருளாதார வளார்ச்சி 7 சதவீதத்தை எட்டக்கூடும்.இவ்வாறு உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சிறப்பம்சங்கள் இந்தியாவில் பணவீக்கம் கணிசமான அளவு குறைகிறது சிறப்பான வளர்ச்சியால் ஏழ்மையிலும் ஏழ்மை குறைகிறது ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியை ஊக்குவித்தால் வளர்ச்சி அதிகரிக்கும் ஐ.டி., சேவைகள், மருந்து துறைகள் முக்கிய பங்கு வகிக்கும் ஜவுளி, ஆடை, காலணி, மின்னணு பொருள் துறை ஏற்றுமதி வாய்ப்பும் கைகொடுக்கும்.