உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / புதிய பங்குகளை வெளியிடும் 4 நிறுவனங்கள்

புதிய பங்குகளை வெளியிடும் 4 நிறுவனங்கள்

புதுடில்லி:இந்த வாரத்தில் நான்கு நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வர இருக்கின்றன. 'நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ், ஏ.சி.எம்.இ., சோலார் ஹோல்டிங்ஸ், ஸ்விக்கி, சாகிலிட்டி இந்தியா' ஆகிய நான்கு நிறுவனங்களும் வரும் வாரம் பங்குகளை வெளியிட உள்ளன.

சாகிலிட்டி இந்தியா

சாகிலிட்டி இந்தியா நிறுவனம், இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறும் அமெரிக்க வாடிக்கையாளர்களின் கட்டண செலவை ஏற்கும் அமெரிக்க காப்பீடு நிறுவனங்களுக்கும், இங்குள்ள மருத்துவ சேவை வழங்குனர்களுக்கும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது.இந்நிறுவனம் 2,106 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குதாரர்களின் பங்குகளை வெளியிட உள்ளது. பங்கு ஒன்றின் விலை 28 - 30 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் பங்குகள் நவம்பர் 12ம் தேதி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட இருக்கின்றன.

ஸ்விக்கி

உணவு டெலிவரியில் ஈடுபட்டு வரும் ஸ்விக்கி நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 11,327 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. 4,499 கோடி ரூபாய் மதிப்புக்கு புதிய பங்குகளும்; 6,828 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குதாரர்களின் பங்குகளும் வெளியிடப்பட உள்ளன. பங்கு ஒன்றின் விலை 370 - 390 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் வரும் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் பங்குகள் நவம்பர் 13ம் தேதி பி.எஸ்.இ., என்.எஸ்.இ., சந்தைகளில் பட்டியலிடப்படும்.

ஏ.சி.எம்.இ.,

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளரான ஏ.சி.எம்.இ., சோலார் ஹோல்டிங்ஸ், பங்கு வெளியீட்டின் வாயிலாக 2,900 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. 2,395 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும்; 505 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குதாரர்களின் பங்குகளும் வெளியிடப்பட உள்ளன. பங்கு ஒன்றின் விலை 275 - 289 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் வரும் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் பங்குகள் நவம்பர் 13ம் தேதி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

'நிவா பூபா'

உடல்நலக் காப்பீட்டுப் பிரிவில் இயங்கி வரும் நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ், பங்கு வெளியீட்டின் வாயிலாக 2,200 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. பங்கு விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. 800 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பங்குகளும்; 1,400 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குதாரர்களின் பங்குகளும் வெளியிடப்பட உள்ளன. முதலீட்டாளர்கள் வரும் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நிறுவனத்தின் பங்குகள் நவம்பர் 14ம் தேதி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி