சரக்கு கையாளும் திறனை மேம்படுத்த இந்தியாவுக்கு ரூ.2,900 கோடி கடன் ஆசிய வளர்ச்சி வங்கி வழங்கியது
புதுடில்லி:இந்தியாவின் சரக்கு கையாளுகை திறனை வலுப்படுத்தி, நவீனமயமாக்கவும்; ஏற்றுமதியை மேம்படுத்தவும், ஏ.டி.பி., எனும் ஆசிய வளர்ச்சி வங்கி, கிட்டத்தட்ட 2,940 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான, பிரதமரின் கதி சக்தி திட்டம் மற்றும் தேசிய சரக்கு கையாளுகை கொள்கையை செயல்படுத்த, இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் நகரங்கள் வாரியாக கொள்கை, திட்டமிடுதல் மற்றும் அமைப்பு ரீதியான கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கப்படும். இந்தியாவின் தயாரிப்பு துறையின் போட்டித்தன்மையை அதிகரிக்க, சரக்கு கையாளுகை துறையை மேம்படுத்துவது மிகவும் முக்கியம் என ஏ.டி.பி., தெரிவித்துள்ளது. அரசின் கொள்கை ரீதியான சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு ஆகியவை, நாட்டின் சரக்கு கையாளுகை திறனை மாற்றியமைக்கும் என, வங்கி தெரிவித்துஉள்ளது. வரும் 2030ம் ஆண்டுக்குள், நாட்டின் சரக்கு மற்றும் சேவைகள் ஏற்றுமதியை 168 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், இதற்கு தேவையான உதவிகளை வழங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக, ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துஉள்ளது.