திவாலான நிறுவன பங்குகளை எஸ்.பி.ஐ., வாங் கலாமா? ஆர்.பி.ஐ., தலையிட காங்கிரஸ் கோரிக்கை
புதுடில்லி:எஸ்.பி.ஐ., வங்கி, கடனில் சிக்கித் தவிக்கும் 'சுப்ரீம் இன்ப்ராஸ்ட்ரக்சர் இந்தியா' நிறுவனத்தின் பங்குகளை வாங்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி தலையிட வேண்டும் என, காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்ததாவது:சுப்ரீம் நிறுவனத்தின் கடனை மறுசீரமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, எஸ்.பி.ஐ., வங்கி, தான் வழங்கியுள்ள கடனுக்குப் பதிலாக, நிறுவனத்தின் பங்குகளை வாங்க உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம், திவால் நிலையை ஏற்கனவே அறிவித்துள்ளது. எஸ்.பி.ஐ., உள்ளிட்ட வங்கிகள், சுப்ரீம் நிறுவனத்துக்கு வழங்கிய கடனில், 93.45 சதவீதத்தை திரும்பப் பெறவில்லை. இந்நிலையில், எஸ்.பி.ஐ.,யின் இந்த முடிவு மிகவும் ஆபத்தானது. மக்களின் டிபாசிட்களே கடன் வழங்க பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை திரும்பப் பெறுவதில் கவனம் செலுத்தாமல், நிறுவனத்துக்கு சாதகமாக வங்கி செயல்படுவது நியாயமற்றது.மேலும், கடன் செலுத்த தவறும் மற்ற நிறுவனங்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிடும். அது மட்டுமல்லாமல், இந்தியாவின் திவால் நடைமுறை கட்டமைப்புகளின் திறன் குறித்த கேள்வியையும் இது எழுப்புகிறது. எனவே, ரிசர்வ் வங்கி இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.