ராப்டீ எச்.வி., பைக் நிறுவனத்தில் மத்திய அரசின் வாரியம் முதலீடு
சென்னை :மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் கீழ் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், மின்சார பைக்குகளை உற்பத்தி செய்யும் சென்னை நிறுவனமான ராப்டீ. எச்.வி., நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இந்த வாரியத்திடம் இருந்து முதலீடு பெறும் முதல் வாகன நிறுவனமாக இந்நிறுவனம் உருவெடுத்துள்ளது. எவ்வளவு முதலீடு செய்யப்படுகிறது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்நிறுவனத்தின் ஹை வோல்டேஜ் உற்பத்தி தளத்தை மேம்படுத்தவும், பைக் உற்பத்தியை அதிகரிக்கவும், இந்த முதலீட்டை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, இந்நிறுவனத்தின் சென்னை மணப்பாக்கம் ஆலை, 4.50 ஏக்கரில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சம் மின்சார பைக்குகளை, இங்கு உற்பத்தி செய்ய முடியும். உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய, செய்யாறு சிப்காட் பகுதியில், 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிதி திரட்டல் முதல் சுற்றில், 160 கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீட்டை ஈர்த்துள்ள இந்நிறுவனம், மின்சார பைக் உற்பத்தியில், மொத்தம் 156 காப்புரிமைகளை வைத்துள்ளது. சார்ஜிங் வசதி இந்நிறுவன பைக்கில், மின்சார கார்களில் வரும் 'சி.சி.எஸ்.2.,' என்ற பொது சார்ஜிங் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இதனால், கார் சார்ஜிங் நிலையத்தில் கூட, இந்த பைக்கை சார்ஜ் செய்து கொள்ளலாம்.