ரூ.8,500 கோடி திரட்ட ஐ.பி.ஓ., வருகிறது குரோ
மும்பை : பங்கு சந்தை தரகு நிறுவனமான குரோ, ரகசிய விண்ணப்ப முறையில் புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கோரி, சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் விண்ணப்பித்து உள்ளது. கடந்த 2016ல் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட குரோ, மிக குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சி கண்டு, கடந்த மார்ச் நிலவரப்படி, பங்கு சந்தை தரகு வர்த்தகத்தில், 26 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. இந்நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக கிட்டத்தட்ட 7,000 -- 8,500 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. இதை, நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தொழில் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. டாடா கேப்பிடல், பிசிக்ஸ்வாலா மற்றும் போட் தயாரிப்பாளரான இமேஜின் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் வரிசையில், குரோவும் ரகசிய விண்ணப்ப முறையில் ஐ.பி.ஓ.,வுக்கு விண்ணப்பித்துள்ளது.