உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / விருப்பமான நாடு அந்தஸ்து விலக்கல் சுவிட்சர்லாந்துடன் பேச அரசு பரிசீலனை

விருப்பமான நாடு அந்தஸ்து விலக்கல் சுவிட்சர்லாந்துடன் பேச அரசு பரிசீலனை

புதுடில்லி:'முதலீடுகளுக்கு மிகவும் விருப்பமான நாடு' என்ற அந்தஸ்தை சுவிட்சர்லாந்து நிறுத்தி வைத்திருப்பதை வாபஸ் பெறுவது குறித்து பேச்சு நடத்த இந்தியா பரிசீலித்து வருகிறது.இதுகுறித்து டில்லியில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்த இந்தியா பேசி வருகிறது. அதில் இரட்டை வரிவிதிப்பு தொடர்பாக மீண்டும் பேச்சு நடத்த வேண்டியிருப்பதால், விருப்பமான நாடு அந்தஸ்தை, சுவிட்சர்லாந்து நிறுத்தி வைத்திருப்பதாகவே கருதுவதாக தெரிவித்தார்.இருதரப்பு வர்த்தகத்தில், இந்தியாவுக்கு வழங்கியிருந்த 'மிகவும் விருப்பமான நாடு' என்ற அந்தஸ்தை சுவிட்சர்லாந்து கடந்த 11ம் தேதி நிறுத்தி வைத்துள்ளது.

கூடுதல் வரி பிடித்தம்

இதையடுத்து, அந்நாட்டில் இயங்கி வரும் இந்திய நிறுவனங்களின் ஈவுத்தொகை வருவாயில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் 10 சதவீதம் வரை கூடுதல் வரி பிடித்தம் செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம், இந்தியாவில் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்த பலன்களை பெறுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம் அந்நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதில், வருமான வரித் துறையால், அறிவிக்கை வெளியிடப்படாத சூழலில், இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த இயலாது எனக் கூறி, டில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், நெஸ்லே நிறுவனம் கூடுதலாக வரி செலுத்த நேரிட்டுள்ளது.இந்நிலையில், இந்தியாவுக்கான விருப்பமான நாடு என்ற அந்தஸ்தை நிறுத்தி வைக்கும் முடிவில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை சுவிட்சர்லாந்து அரசு சுட்டிக்காட்டி உள்ளது. தங்கள் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களின் வரிச்சலுகையை இத்தீர்ப்பு பறித்துள்ளதற்கு பதிலடியாக, இந்தியாவுக்கு அளித்து வந்த விருப்பமான நாடு என்ற அந்தஸ்தை சுவிட்சர்லாந்து நிறுத்தி வைத்துள்ளதாகவே கருதப்படுகிறது.

பாதிப்பு

அடுத்த 15 ஆண்டுகளில், 8.40 லட்சம் கோடி ரூபாயை இந்தியா வில் முதலீடு செய்ய, சுவிட்சர்லாந்து உட்பட நான்கு நாடுகள் கொண்ட ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதத்தில் கையெழுத்தானது. தற்போது சுவிட்சர்லாந்தின் இந்த முடிவால், அந்த முதலீடுகள் பாதிக்கப் படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை