உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / படிப்பை முடித்ததும் சொந்த மாநிலத்தில் தொழில் துவங்க முன்வர வேண்டும் வடகிழக்கு மாநில மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை

படிப்பை முடித்ததும் சொந்த மாநிலத்தில் தொழில் துவங்க முன்வர வேண்டும் வடகிழக்கு மாநில மாணவர்களுக்கு கவர்னர் அறிவுரை

சென்னை:''வடகிழக்கு மாநிலங்களில் அடிப்படை கட்டமைப்புகள் வளர்ச்சி அடைந்து வருவதால், இளைஞர்கள் அங்கு தொழில் துவங்க முன்வர வேண்டும்'' என, கவர்னர் ரவி அழைப்பு விடுத்தார்.மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில் படித்து வரும், வடகிழக்கு மாநில மாணவர்கள், அருணாசலப்பிரதேச மாநிலத்தின் கல்வி மற்றும் சுற்றுலா துறையுடன் இணைந்து, 'வடகிழக்கு மாநிலங்களை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை நோக்கி வழி நடத்துவோம்' என்ற தலைப்பில், நேற்று மாநாடு நடத்தினர். சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி தலைமை தாங்கினார். இதில், கவர்னர் ரவி பங்கேற்று பேசியதாவது: வடகிழக்கு மாநிலங்களில், ஆங்கிலேயேர் ஆட்சியின் போது தேயிலை வளம் மிக்க 6 லட்சம் ஹெக்டேர் நிலப் பரப்பளவை ஆக்கிரமித்துக் கொண்டனர். அங்கு உள்ளூர் மக்களுக்கு தடை விதித்தனர். சுதந்திரத்திற்கு பிறகு, தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்களாக, பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டத்துக்கு புறம்பாக நுழைந்தனர். அங்கு தொழில் துவங்க போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலை மாறிவிட்டது. அங்கு அடிப்படை கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்பட்டன. வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனால், இம்மாநிலங்களில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இங்கு படித்து வரும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் படிப்பை முடித்ததும், சொந்த மாநிலங்களில் தொழில் துவங்கி, அம்மாநில பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும். இதன் வாயிலாக நாடும் வளர்ச்சி பெறும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !