சிங்கப்பூர் உடன் பசுமை எரிசக்தி வழித்தடம்
புதுடில்லி:இந்தியா -- சிங்கப்பூர் இடையே, பசுமை எரிசக்தி வழித்தடம் அமைப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக, சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்துள்ள அவர், டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:சிங்கப்பூருக்கு இயற்கையான நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. இரு நாடுகளும் நிலையான வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இதன் அடிப்படையில், இரு நாடுகளுக்கும் இடையே பசுமை எரிசக்தி வழித்தடம் அமைப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார். 'பவர் கிரிட்' இணைப்புகள் வாயிலாக, நாடுகளுக்கு இடையே பசுமை எரிசக்தி பரிமாற்றங்கள் மேற்கொள்ள முடியும்.இந்தியா ஏற்கனவே சவுதி அரேபியாவுடன் பசுமை எரிசக்தி பரிமாற்ற இணைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது தவிர, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளுடனும் இரு தரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முனைப்பு காட்டி வருகிறது.இந்நிலையில், தற்போது சிங்கப்பூரும் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.