ரூ.4,225 கோடிக்கு ஐ.பி.ஓ., வருகிறது ஐ.ஜி.ஐ., இந்தியா
மும்பை: 'இன்டர்நேஷனல் ஜெம்மாலஜிக்கல் இன்ஸ்டிடியூட்' எனப்படும் ஐ.ஜி.ஐ., இந்தியா நிறுவனம், 4,225 கோடி ரூபாய் முதலீடு திரட்ட, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. பெல்ஜியத்தை தலைமையிடமாகக் கொண்ட ஐ.ஜி.ஐ., நிறுவனம், நியூயார்க், ஹாங்காங், மும்பை, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இயற்கை வைரம், செயற்கை வைரம் மற்றும் ரத்தினக் கற்கள் பதித்த நகைகளை பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்குவதில் ஈடுபட்டுவருகிறது. கடந்தாண்டு, இந்நிறுவனத்தை, அமெரிக்காவைச் சேர்ந்த சொத்து மேலாண்மை நிறுவனமான 'பிளாக்ஸ்டோன்' கையகப்படுத்தியது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் இந்திய பதிப்பான ஐ.ஜி.ஐ., இந்தியா, ஏற்கனவே தன் முதலீட்டாளர்கள் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 2,750 கோடி ரூபாயும், புதிய பங்குகள் வெளியீடு வாயிலாக 1,475 கோடி ரூபாயும் என, மொத்தம் 4,225 கோடி ரூபாய் திரட்ட முன்வந்துள்ளது. இதில், 10 சதவீதம் சில்லரை முதலீட்டாளர்களுக்கு பங்குகளை ஒதுக்க முடிவு செய்துள்ளது. நிறுவன முதலீட்டாளர்கள் டிச., 12ம் தேதியும், பிற முதலீட்டாளர்கள், வரும் டிச., 13 - 17 வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம் என, ஐ.ஜி.ஐ., இந்தியா அறிவித்து உள்ளது.