6 நாடுகளின் பாலித்தீன் குவிப்பு இறக்குமதி மீது இந்தியா விசாரணை
புதுடில்லி:வளைகுடா நாடுகள் மற்றும் மலேஷியா உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் வேதியியல் பொருளான பாலித்தீன் இறக்குமதி தொடர்பான புகாரின் மீது, பொருட்குவிப்பு தடுப்புக்கான விசாரணை துவங்கியுள்ளது.பேக்கேஜிங், கட்டுமானம் மற்றும் பிளாஸ்டிக் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் லீனியர் டென்சிட்டி பாலித்தீன், இந்தியாவிற்குள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் இந்திய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையினர் மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்துக்கு புகார் தெரிவித்திருந்தனர்.வளைகுடா நாடுகளான குவைத், ஓமன், கத்தார், சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மலேஷியாவில் இருந்து மலிவான விலையில் அதிகளவில் பாலித்தீன் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு தொழில் துறை பாதிப்புக்குள்ளாவதாக புகாரில் கூறப்பட்டது.இதையடுத்து, வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் டி.ஜி.டி.ஆர்., எனப்படும் வர்த்தக தீர்வுகளுக்கான இயக்குநரகம் தன் விசாரணையை துவக்கியுள்ளது. விசாரணையில், அதிகளவில் இறக்குமதி செய்திருப்பது உறுதியானால், மேற்கண்ட நாடுகளுக்கு பொருட்குவிப்பு தடுப்பு வரி விதிக்க, மத்திய நிதியமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படும். வரி விதிப்பதற்கான இறுதி முடிவை அமைச்சகம் எடுக்கும்.பாலித்தீன் பொருட்கள் பிளாஸ்டிக் பை உணவு கன்டெய்னர் பிலிம் தண்ணீர், காஸ் குழாய் டேப், ஷீட் பாட்டில் பொம்மை ஒயர் மருத்துவ சாதனம் சமையலறை பொருட்கள்