பரந்துார், ஓசூரில் கார்கோ கிராமம்: டிட்கோ தலைவர் தகவல்
சென்னை:“பரந்துார் மற்றும் ஓசூர் விமான நிலையங்கள் அருகில், சரக்குகள் கையாளலுக்கான 'கார்கோ கிராமங்கள்' அமைக்கப்படும்” என, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக தலைவர் சந்தீப் நந்துாரி தெரிவித்து உள்ளார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், 'தளவாட போக்குவரத்து வளர்ச்சி' என்ற தலைப்பில், மூன்று நாட்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெறுகிறது. சரக்குகளை கையாளுவது தொடர்பான தொழில்நுட்பங்கள், நவீனரக கருவிகள் இதில் காட்சிப்படுத்தப்பட்டன. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக தலைவர் சந்தீப் நந்துாரி பேசியதாவது: கோவை, மதுரையில் விரைவில் இரண்டு ஐ.டி., பூங்காவை துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பரந்துார், ஓசூரில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த விமான நிலையங்களில், சரக்கு முனையங்கள் அமைக்கப்பட உள்ளன. அவற்றின் அருகில் சரக்குகளை கையாள்வதற்கான 'கார்கோ கிராமங்கள்' அமைக்க திட்டமிட்டுள்ளோம்.தமிழகத்தில், ரயில்வேயுடன் இணைந்து அதிவிரைவு ரயில் பாதை மற்றும் பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மதுரை - துாத்துக்குடி, சென்னை - ஓசூர், கோவை - துாத்துக்குடி வழித்தடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக கண்காட்சியைத் துவக்கி வைத்த சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் பேசியதாவது:உலக நாடுகளில் நடைபெறும் 75 சதவீதம் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவை கப்பல் போக்குவரத்தில் நடக்கிறது. தளவாட போக்குவரத்தில் செலவை குறைப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக பொறுப்புணர்வு ஆகியவற்றை முக்கிய அம்சங்களாக கொண்டு செயல்பட வேண்டும். அப்போது தான் உற்பத்தியாளர்களுக்கும், வாடிக்கை யாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கோட்பாடுகளை, சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகத்திலும் படிப்படியாக அமல்படுத்தி வருகிறோம். எரிபொருள், மின்சார பயன்பாடு சிக்கனம், மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்பு போன்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
கார்கோ கிராமம்
விமான நிலைய சரக்கு முனையங்களில் இருந்து இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சரக்குகளின் விரைவான அனுமதியை உறுதி செய்வது, வணிக மையம், டிரக் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கார்கோ கிராமத்தில் இடம்பெறும்.