| ADDED : பிப் 07, 2024 12:07 AM
புதுடில்லி:உணவுப் பொருட்களுக்கான பல்வேறு தரச்சான்றிதழ்கள் பெறுவதை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வழங்கும் ஒரு சான்றிதழ் மட்டும் போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.உணவு பாதுகாப்பு ஆணையத்தின் 43வது கூட்டத்தில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலைகளை சீராக்க, பல்வேறு திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இக்கூட்டத்திற்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் அபூர்வ சந்திரா தலைமை வகித்தார்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:உணவுப் பொருட்களுக்காக பல்வேறு தரச்சான்றிதழ்கள் தற்போது வாங்கும் நிலை உள்ளது. இதை மத்திய அரசு ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.இதனடிப்படையில், 'அக்மார்க்' மற்றும் பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தர நிர்ணய கழக சான்றிதழ் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டு, ஒரே அமைப்பின் கீழ் சான்றிதழ்கள் பெறும் வகையில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழங்கும் ஒரு சான்றிதழ் மட்டும் போதுமானது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அக்மார்க் மற்றும் பி.ஐ.எஸ்., சான்றிதழ்களை நீக்குவதற்கு, பல்வேறு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகளில் பல்வேறு திருத்தங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.திருத்தங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, உணவுப் பொருட்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்றிதழ் மட்டுமே கட்டாயமாக்கப்படுவதால், உணவு வணிகங்கள், கட்டாயச் சான்றிதழுக்காக, வெவ்வேறு அதிகாரிகளிடம் செல்ல வேண்டியதில்லை.எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., இது தொடர்பான வரைவு அறிவிப்பை வெளியிடும். மேலும், விதிகளில் திருத்தங்களை இறுதி செய்வதற்கு முன், சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துகளைக் கேட்கும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.