மேலும் செய்திகள்
நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம்!
04-Dec-2024
புதுடில்லி:முன்னணி நுகர் பொருட்கள் நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர், கடைகளுக்கு நேரடியாக பொருட்களை சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு, அகில இந்திய நுகர்பொருள் வினியோக கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளது.தயாரிப்பு ஆலைகளில் இருந்து பொருட்களை நேரடியாக மளிகை மற்றும் பெட்டிக் கடைகளுக்கு சப்ளை செய்யும் முயற்சியை, 2022ம் ஆண்டே 'சமாதான்' என்ற பெயரில் சென்னை அருகே ஹிந்துஸ்தான் யுனிலீவர் மேற்கொண்டது. நேரம் மற்றும் செலவு மிச்சமாவதுடன், நுகர்வோரிடம் பொருட்களை விரைவாக கொண்டு சேர்க்க இந்த வழியை தேர்வு செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்தது. அதோடு, பிளிப்கார்ட், ஜியோமார்ட், மெட்ரோ கேஷ் அண்டு கேரி ஆகிய நிறுவனங்களின் பிசினஸ் டூ பிசினஸ், இ-காமர்ஸ் வணிகத்தின் போட்டியை சமாளிக்கவும் 'ஆலை டூ அண்ணாச்சி கடை' சப்ளையை ஹிந்துஸ்தான் யுனிலீவர் மேற்கொள்ள விரும்புகிறது. இதன், வேகத்துக்கு வினியோகஸ்தர் வாயிலாக நடக்கும் சப்ளை இருக்காது என, இந்நிறுவனம் கருதுகிறது.ஆனால், பாரம்பரியமாக இந்நிறுவனத்தின் வினியோகஸ்தராக உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தங்கள் வணிகமும், வருவாயும் பாதிக்கும் என குரல் கொடுக்கும் நிலையில், நுகர்வோர் பொருட்கள் வினியோக கூட்டமைப்பு தற்போது அதில் களம் இறங்கிஉள்ளது.உடனடி லாபம் என்ற குறுகிய நோக்கத்திலான, களநிலவரத்தை அறியாத இந்த முயற்சியால், வினியோக கட்டமைப்பு சீர்குலைய நேரிடும் என, கூட்டமைப்பின் தேசிய தலைவர் தயர்சில் பாட்டீல் தெரிவித்தார். இதனால், எந்த வினியோகஸ்தராவது பாதிக்கப்பட்டால், தேசிய அளவில் வணிகர்களை திரட்டி நடவடிக்கையில் கூட்டமைப்பு இறங்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.எனினும், இதுகுறித்து ஹிந்துஸ்தான் யுனிலீவரின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், வினியோகஸ்தர்களுடன் நிறுவனத்தின் உறவு நீடிப்பதாகவும்; தங்கள் நிறுவன சப்ளை தொடரின் அங்கமாக அவர்கள் தொடர்வர் என்றும் தெரிவித்தார். நாட்டின் நுகர்வோர் பொருட்கள் சந்தையில் 80 சதவீதத்தை, வீட்டு அருகில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகள் நிறைவு செய்கின்றன மாறி வரும் சூழலை மனதில் கொண்டு, பாரம்பரிய வினியோகஸ்தர்களை மட்டுமின்றி மாற்று வழியையும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் விரும்புகிறது ஷிகார் செயலி வாயிலாக, ஆர்டர் செய்யும் சிறு கடைகளுக்கும், தன் கிடங்குகளில் இருந்து நேரடியாக பொருட்களை சப்ளை செய்கிறது தற்போது மூன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்கள் வினியோகத்தை, இந்த செயலி வாயிலாக ஹிந்துஸ்தான் யுனிலீவர் மேற்கொள்கிறது.
நாடு முழுதும் ஹிந்துஸ்தான் யுனிலீவருக்கு, 2,000 நகரங்களில் மொத்தம் 3,500 வினியோகஸ்தர்கள் உள்ளனர். வியாபார அளவு அடிப்படையிலான லாப அளவு என்ற திட்டத்தை இந்நிறுவனம் முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில், பொருட்கள் மீது 3.90 சதவீதமாக இருந்த நிலையான லாபம், 3.30 சதவீதமாக குறைக்கப்பட்டது. மாறக்கூடிய லாப அளவு 1 சதவீதத்தில் இருந்து 1.30 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. அப்போதும், வினியோகஸ்தர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் அந்நிறுவனத்தின் வினியோகஸ்தர் பொறுப்பில் இருந்து விலகியதால், 30 சதவீத விற்பனை சரிவு ஏற்பட்டது. தற்போது, பொருட்களை நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்யும் முடிவுக்கு மட்டுமின்றி, பொருட்கள் விற்பனையில் இந்நிறுவனம் இமாலய இலக்கு நிர்ணயிப்பதாகவும் வினியோகஸ்தர்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
04-Dec-2024