ரூபாய் மதிப்பு பெரும் சரிவு டாலரை விற்கிறது ஆர்.பி.ஐ.,?
புதுடில்லி:அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, நேற்று இதுவரை இல்லாத வீழ்ச்சியை எட்டி 84 ரூபாயை தாண்டியது. கரன்சி வர்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு, 1 டாலர் 84.09 ரூபாய் என்ற அளவில் வீழ்ச்சி கண்டது. நேற்று 83.96 ரூபாயாக மதிப்பு இருந்த நிலையில், இன்று 84 ரூபாயை தாண்டியது. இதற்கு முன், செப்டம்பர் 12ம் தேதி 83.98 ரூபாயாக மதிப்பு இருந்தது தான் அதிகபட்ச சரிவாக இருந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதும்; இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் பணத்தை திரும்பப் பெற்று வருவதும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்தும் நோக்கில், தன் வசமுள்ள அமெரிக்க டாலர்களில் ஒரு பகுதியை, கரன்சி சந்தையில் விற்பனை செய்ய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.