வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்போதைக்கு கட்டிடுங்க. பின்னாடி மக்களிடம் அடிச்சு பிடுங்கிடலாம்.
புதுடில்லி:மொத்த வருமானம் குறித்த, தொலைதொடர்பு துறையின் கணக்கீட்டில் தவறு இருப்பதாக கூறி, தொலைபேசி நிறுவனங்கள் தொடர்ந்த சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தொலைதொடர்பு நிறுவனங்கள், கடந்த 10 ஆண்டுகளாக மொத்த வருவாயில் பாக்கி வைத்துள்ள லைசென்ஸ் கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் ஆகியவற்றை செலுத்த உத்தரவிடக் கோரி, 2020ல் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், கட்டணங்கள், அவற்றின் மீதான வட்டி மற்றும் அபராதமாக 1.47 லட்சம் கோடி ரூபாயை செலுத்த, தொலைபேசி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.தங்களது மொத்த வருவாய் குறித்து தொலைதொடர்பு துறையின் கணக்கீட்டில் பிழைகள் இருப்பதாகக் கூறி, 2021ல் தொலைபேசி நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.கடந்த ஆண்டில் 'ஏர்டெல், வோடபோன் ஐடியா' நிறுவனங்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி, லைசென்ஸ் கட்டணத்தை ஏற்பதாகவும், கட்டண பாக்கி மீதான அபராதம் மற்றும் அபராத தொகைக்கு வட்டி விதிக்கப்படுவதை நீக்குமாறும், சீராய்வு மனு செய்தன. மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, பி.ஆர்.கவாய் அமர்வு, வருவாய் கணக்கீட்டில் தவறு இருப்பதாகக் கூறியதை ஏற்க மறுத்து, சீராய்வு மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இது தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 2020ல் தொலைபேசி நிறுவனங்களின் கட்டண நிலுவை ரூ.1.47 லட்சம் கோடி உரிமக் கட்டணம் ரூ.92,642 கோடி அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் ரூ.55,054 கோடி மொத்த தொகையில் வட்டி, அபராதம், அபராத வட்டி 75%
கடும் போட்டியை சமாளிக்க இயலாமல் ஏற்கனவே, கடன் சுமையில் தவிக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு பேரிடியாக அமைந்து உள்ளது. நிறுவனத்தின் மோசமாக உள்ள நிதி நிலையை, இது மேலும் மோசமாக்கும் என கருதப்படுகிறது. ஏ.ஜி.ஆர். எனப்படும் சரிசெய்யப்பட்ட மொத்த வருமானத்தில், லைசென்ஸ் கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணமாக அரசுக்கு பெருந்தொகையை வோடபோன் ஐடியா பாக்கி வைத்துள்ள நிலையில், அது பெரும் சிக்கலை எதிர்கொள்கிறது. சீராய்வு மனு தள்ளுபடியானதும், அந்நிறுவன பங்கு விலை, 19 சதவீத சரிவை சந்தித்தது.
நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்குப் பிறகு, மனுதாரரின் கடைசிக்கட்ட சட்டத் தீர்வாக கருதப்படுவது சீராய்வு மனு. இதை தாக்கல் செய்தாலும், குறிப்பிட்ட, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் மட்டுமே, நீதிமன்றம் சீராய்வு மனுவை பரிசீலனைக்கு ஏற்கும். அதில், இந்த வழக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போதைக்கு கட்டிடுங்க. பின்னாடி மக்களிடம் அடிச்சு பிடுங்கிடலாம்.