சாம்சங் தலைமை பொறுப்பு இதுவரை இல்லாத மாற்றம்
சியோல்:'சாம்சங்' குழுமத்தின் 86 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக, சாம்சங் நிறுவனரின் குடும்பத்தைச் சேராத பெண் ஒருவர், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட சாம்சங் குழுமத்தின் கீழ் எலக்ட்ரானிக்ஸ், பொறியியல், நிதிச்சேவை உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் தலைமை பொறுப்புக்கு, வழக்கமாக சாம்சங் நிறுவனரான லீ பியூங் சூல் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களே இதுவரை நியமிக்கப்பட்டு வந்தனர். தென்கொரியாவில் ஆண் -- பெண் கல்வியறிவு விகிதம் சமமாக இருந்த போதிலும், கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆண்களுக்கு மட்டுமே தலைமை பதவி, ஊதிய விகிதத்தில் பாலின சமத்துவமின்மை போன்ற சூழலே நிலவி வருகிறது. இதை மாற்றும் முயற்சியாக, சாம்சங் குழுமத்தின் மருந்து பொருட்கள் தயாரிப்பு அங்கமான, 'சாம்சங் பயோபிஸ்' நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கிம் கியூங் - ஆ நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு முன், லீ பூ - ஜின் என்ற ஒரே ஒரு பெண் மட்டுமே தலைமை பொறுப்பு வகித்திருக்கிறார்.