விண்வெளி ஸ்டார்ட் அப்களுக்கு ஒற்றை சாளர முறையில் அனுமதி
சென்னை:விண்வெளி துறை சார்ந்த, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, பல்வேறு அரசு துறைகளின் அனுமதியை, ஒற்றைச்சாளர முறையில் விரைந்து பெற்றுத்தர சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை முடிவு செய்துஉள்ளது.தமிழகத்தில் ராக்கெட் உருவாக்கம், செயற்கைக்கோள் வடிவமைப்பு தொடர்பான விண்வெளி துறையில், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு அரசு துறைகளின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.இதுகுறித்து, சிறு தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:புத்தொழில் நிறுவனம் துவங்குவோர், மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு அமைப்பிடம் பதிவு செய்ய வேண்டும். இது, பலருக்கு தெரிவதில்லை. பதிவு செய்ய புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்யப்படுகிறது. புத்தொழில் நிறுவனங்கள் ராக்கெட் ஏவுவதாக இருந்தால், விமான நிலைய ஆணையம், கடற்படை, மாநில அரசு துறைகள் என, பல துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். இதனால், அவற்றுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி பெற்றுத்தரப்படும். இதன் வாயிலாக, தாமதம் குறையும் என்பதால், தொழில்களை விரைந்து துவங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.