உணவு பதப்படுத்தும் திட்ட மானியம் ரூ.35 லட்சமாக உயர்த்த நடவடிக்கை
சென்னை : பிரதமர் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில்களை முறைப்படுத்தும் திட்டத்தில், இயந்திரங்கள் வாங்குவதற்கான மானியத்தை மத்திய அரசு, 10 லட்சம் ரூபாயில் இருந்து, 35 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இதனால், இத்திட்டத்தில் தமிழகத்தில் மேலும் பலர் பயனடைய வாய்ப்புள்ளது. உணவு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குறுந்தொழில் நிறுவனங்கள் தரமான பொருட்களை உற்பத்தி செய்யவும், அவற்றுக்கு அங்கீகாரம் கிடைக் கவும், 'பிரதம மந்திர உணவு பதப்படுத்தும் குறு நிறுவ னங்களை முறைப்படுத்தும் திட்டத்தை' மத்திய அரசு, 2020 - 21ல் துவக்கியது. இத்திட்டத்தின் கீழ் இயந்திரங்கள் வாங்க, 35 சதவீதம் அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழு உள்ளிட்டவை பொது வசதி அமைக்க, 3 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டத்தை சிறு, குறு, நடுத்தர தொழில்துறை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில், 16,000 பேருக்கு, 900 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பயனாளிக்கு வழங்கப்படும் மானியத்தில், மத்திய அரசின் பங்கு, 60 சதவீதமாகவும், தமிழக அரசின் பங்கு, 40 சதவீதமாகவும் உள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ள, தமிழகம், பீஹார், மஹாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மானியத்தை உயர்த்துமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, இயந்திரம் வாங்கும் மானியத்தை 35 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்த உள்ளது. மேலும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்சம், 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. மத்திய நிதி துறை ஒப்புதல் அளிக்கப்பட்டதும், மானிய உயர்வு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இதனால், தமிழகத்தில் மேலும் பலர் பயனடைய வாய்ப்புள்ளது. பெண்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்சம், 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது