சிறு தொழில்களை வலுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை
சென்னை : தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல், தொழில்நுட்ப ஜவுளி, எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், தோல் மற்றும் தோல் அல்லாத காலணி உள்ளிட்ட ஆறு துறை சிறு தொழில் நிறுவனங்களை வலுப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உலகளவில் விரைவான தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள் வருகையால், தொழில்களின் போக்குகள் வேகமாக மாறி வருகின்றன. புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றி, உலகளாவிய போட்டியை சமாளிக்க, இந்நிறுவனங்களின் தேவைகளை கேட்டறிந்து, ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த தமிழக சிறு,குறு, நடுத்தர தொழில் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, உற்பத்தித்திறன் மேம்பாடு, டிஜிட்டல் மயம், ஆராய்ச்சி மற்றும் புதுமை, திறன் மேம்பாடு, சந்தை மற்றும் ஏற்றுமதி, நிலைத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய, 'இண்டஸ்ட்ரீ டிரான்ஸ்பர்மேஷன் ரோட் மேப்' எனப்படும் தொழில் மாற்ற வரைபடம் தயாரிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக, எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், தோல் மற்றும் தோல் அல்லாத காலணிகள், உணவு பதப்படுத்துதல், தொழில்நுட்ப ஜவுளி, நவீன சில்லரை விற்பனை மற்றும் மின் வணிகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளுக்கான தொழில் மாற்ற வரைபடம் உருவாக்குவதற்கான முதல் கட்ட பணிகளை பேம் டி.என்., நிறுவனம் துவக்கியுள்ளது.
10 ஆண்டு மாற்றத்துக்கு தயார்
தொழில் துறையினருக்கு தேவைப்படும் உதவி கள், எதிர் கொள்ளும் சவால்கள், சந்தை வாய்ப்பு கள் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. இது, அடுத்த ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு ஏற்பட போகும் தொழில்நுட்ப மாற்றங்களை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் வகையில் இருக்கும். அதற்கு ஏற்ப, ஊக்குவிப்பு செயல் திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது.