உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / டி.சி.எஸ்., பணி நீக்கம்: கவனிக்கிறது அரசு

டி.சி.எஸ்., பணி நீக்கம்: கவனிக்கிறது அரசு

புதுடில்லி :டி.சி.எஸ்., நிறுவனம் 12,000 பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக வெளியிட்ட அறிவிப்பை அடுத்து, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக, அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வேலைவாய்ப்பு வளர்ச்சியை முக்கிய முன்னுரிமையாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கருதுகிறது. வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்கள், ஊழியர்களின் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் மறு பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் ஊழியர்கள் பணி நீக்கப்படுவர் என்ற அறிவிப்பால், அமைச்சகம் கவலை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பணி நீக்கத்துக்கான அடிப்படை காரணங்கள் மற்றும் இந்நடவடிக்கைக்கான தேவை குறித்து அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்; இதுகுறித்து ஆய்வு நடத்தப்படும் என்றும், அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டி.சி.எஸ்., எனும் டாடா கன்சல்டன்சி நிறுவனம், வெளியிட்ட பணி நீக்க அறிவிப்பில், நடுத்தர மற்றும் மூத்த நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் பாதிக்கப்பட, அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு எந்த திட்டத்திலும் சேர்ந்து செயல்படாத இளநிலை ஊழியர்களும் வேலைநீக்கத்தில் இடம்பெறுவர் என தகவல் வெளியாகியுள்ளது.

பங்கு விலை சரிவு

டி.சி.எஸ்.,சின் பணி நீக்க அறிவிப்பைத் தொடர்ந்து, நிறுவனத்தின் பங்குகள் நேற்று மும்பை பங்கு சந்தையில் 1.76 சதவீதம் சரிவு கண்டன. மேலும், தேசிய பங்கு சந்தையிலும் 1.56 சதவீதம் வீழ்ச்சி கண்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ