உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தையில் இறக்கம் தொடர்வதற்கான சூழலே உள்ளது

பங்கு சந்தையில் இறக்கம் தொடர்வதற்கான சூழலே உள்ளது

கடந்த வாரம்

 கடந்த அக்டோபர் 16 முதல் 31ம் தேதி வரையிலான காலத்தில், அன்னிய முதலீட்டாளர்கள் 33,995 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை விற்று உள்ளனர். எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகளை அதிகளவில் விற்றும்; சுகாதாரம், மின்சாரத் துறை சார்ந்த பங்குகளை அதிகளவில் வாங்கியும் இருந்தனர்  வங்கிகள் வழங்கும் கடனுக்கும், திரட்டும் டிபாசிட்களுக்கும் இடையேயான விகிதம், கடந்த அக்டோபர் இறுதியில் 77.70 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே கடந்த 30 மாதங்களில் குறைவாகும்  'மார்கன் ஸ்டான்லி'யின் எம்.எஸ்.சி.ஐ., குறியீட்டில், இந்தியாவுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்திய பங்குச் சந்தைகளில், கிட்டத்தட்ட 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என, சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்  நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, தொடர்ந்து ஐந்தாவது வாரமாக, கடந்த நவம்பர் 1ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்திலும் குறைந்துள்ளது. இந்த காலத்தில் கையிருப்பு 21,997 கோடி ரூபாய் குறைந்து, 57.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது  கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு முதன் முறையாக, இரு சக்கர வாகன விற்பனை, நகர்ப்புறங்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. நல்ல பருவமழை, சிறப்பான விளைச்சல் மற்றும் கரீப் பருவ விதைப்புகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயித்தது ஆகியவற்றின் காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், கிராமப்புற இரு சக்கர வாகன விற்பனை 9 சதவீதம் அதிகரித்துள்ளது  இந்திய நிறுவனங்கள், நடப்பாண்டில் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 1.19 லட்சம் கோடி ரூபாய் திரட்டியுள்ளன. இதற்கு முன்பு கடந்த 2021ம் ஆண்டு, 1.18 லட்சம் கோடி ரூபாய் திரட்டியதே அதிகபட்சமாக இருந்தது. குறிப்பாக அன்னிய முதலீட்டாளர்கள் 87,000 கோடி ரூபாய் முதலீடு செய்துஉள்ளனர்.

வரும் வாரம்

 உற்பத்தி நிறுவனங்களில் நடந்த உற்பத்தி, பணவீக்க அளவு, தொழிற்சாலைகளில் நடந்த உற்பத்தி, எம்3 பணப்புழக்கம், மொத்த விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம், வங்கிகளில் உள்ள வைப்பு நிதியின் அளவில் வளர்ச்சி, வங்கி கள் வழங்கிய கடன் அளவில் வளர்ச்சி, ஏற்றுமதி -இறக்குமதியின் அளவு மற்றும் இவற்றின் நிகர அளவு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன பணவீக்க அளவு, உற்பத்தி நிறுவனங்களின் விலை குறியீடு, வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, சில்லரை விற்பனை நிலவரம், தொழிற்சாலைகளின் உற்பத்தி போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.

கவனிக்க வேண்டியவை

 கடந்த வாரம் திங்களன்று, 309 புள்ளி இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 217 புள்ளிகள் ஏற்றத்துடனும்; புதனன்று 270 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வியாழனன்று 284 புள்ளிகள் இறக்கத்துடனும்; வெள்ளியன்று வர்த்தக நாளின் இறுதியில் 51 புள்ளிகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில், வாராந்திர அடிப்படையில் அதாவது, திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஒட்டுமொத்த அளவீட்டில் 156 புள்ளிகள் இறக்கத்துடன் நிப்டி நிறைவடைந்திருந்தது வரும் வாரத்தில், வெள்ளிக்கிழமையன்று சந்தைக்கு விடுமுறை தினம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளிவர இருக்கின்றன. காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்தும், செய்திகள், நிகழ்வுகள் மற்றும் உலக பங்கு சந்தைகளில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றின் அடிப்படையிலுமே, சந்தையின் போக்கில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. டெக்னிக்கல் அனாலிசிஸின் படி பார்த்தால், நிப்டியில் இறக்கம் தொடர்வதற்கான சூழல் இருப்பதைப் போன்ற நிலைமையே இருக்கிறது. செய்திகள், காலாண்டு முடிவுகள், மற்றும் சந்தையின் நகர்வில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிலான உலகளாவிய நிகழ்வுகள் போன்றவையே, வரும் வாரத்தில் நிப்டியின் நகர்வை தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தவறாமல் மிகவும் குறுகிய அளவிலான நஷ்டம் குறைக்கும் ஸ்டாப்லாஸ்களை வைத்துக்கொண்டும்; சராசரியாக வர்த்தகம் செய்யும் அளவில், சரிபாதிக்கும் குறைவான எண்ணிக்கையிலும், அதீத எச்சரிக்கையுடனும் மட்டுமே வர்த்தகர்கள் வர்த்தகம் செய்வது குறித்து பரீசீலனை செய்யலாம்.

நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்

நிப்டி 23,797, 23,446 மற்றும் 23,170 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான ஆதரவையும், 24,518, 24,889 மற்றும் 25,164 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும், டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24,167 என்ற அளவிற்கு மேலே சென்று, தொடர்ந்து அதிக அளவில் வர்த்தகமாகிக்கொண்டு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை