மாற்றமின்றி தொடரும் வேலையின்மை விகிதம்
புதுடில்லி: நாட்டில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கான வேலையின்மை விகிதம், கடந்தாண்டு ஜூலை முதல் நடப்பாண்டு ஜூன் வரையிலான காலத்தில் 3.20 சதவீதமாக இருந்தது என, தொழிலாளர் கணக்கெடுப்பு தொடர்பான பி.எல்.எப்.எஸ்., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய ஆண்டிலும் வேலையின்மை விகிதம் 3.20 சதவீதமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக குறைந்து வந்த வேலையின்மை விகிதம், கடந்தாண்டு மாற்றம் ஏதும் இன்றி உள்ளது. பாலின வாரியாக பார்க்கும்போது, ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவிலும் வேலையின்மை 3.20 சதவீதமாகவே இருந்தது. எனினும், பெண்கள் பிரிவில் முந்தைய ஆண்டில் வேலையின்மை 2.90 சதவீதமாக இருந்த நிலையில், கடந்தாண்டு அதிகரித்துள்ளது. இதற்கிடையே, தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் பெண்களின் பங்கு, கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வகையில் 41.70 சதவீதமாக இருந்தது. இருப்பினும், ஆண்களின் பங்கேற்பு விகிதமான 78.80 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இது மிகக் குறைவாகும். ஊரகப்பகுதிகளில் வேலையின்மை அதிகரித்ததே, வேலையின்மை விகிதம் குறையாததற்கு காரணமாக அமைந்தது. கடந்த 2022-23ல், 2.40 சதவீதமாக இருந்த ஊரகப் பகுதி வேலையின்மை, கடந்தாண்டு 2.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும், நகர்ப்புற வேலையின்மை 5.40 சதவீதத்திலிருந்து 5.10 சதவீதமாக குறைந்துள்ளது.