உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / கூகுள் வணிகத்தை பிரிப்பாரா சுந்தர் பிச்சை? கூகுளுக்கு எதிராக திரும்பும் அமெரிக்க அரசு

கூகுள் வணிகத்தை பிரிப்பாரா சுந்தர் பிச்சை? கூகுளுக்கு எதிராக திரும்பும் அமெரிக்க அரசு

நியூயார்க்:இணையதள தேடல் வணிகத்தில், கூகுளின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், அதன் 'குரோம்' தேடுபொறி மற்றும் 'ஆண்ட்ராய்டு' இயங்குதள வணிகத்தை பிரிக்க உத்தரவிடுமாறு, அமெரிக்க அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கும் எனத் தெரிகிறது.'ஆல்பபெட்' நிறுவனத்தைச் சேர்ந்த கூகுள், உலகின் இணையதள சேவை மற்றும் செல்போன் செயலிகள் வணிகத்தில் முன்னிலை வகிக்கிறது. அதேநேரம், இது ஏகபோகம் என்றும் வர்த்தக போட்டி சமநிலைக்கு எதிரானது என்றும், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.அதாவது, குரோம் என்ற பெயரில் இணையதள தேடுபொறி சேவை அளித்து வரும் கூகுள் நிறுவனம், அமெரிக்காவில் 90 சதவீத இணையதள தேடல்களை நிர்வகிப்பதாகவும்; இது சட்டவிரோத ஏகபோகம் என்றும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டு ஏற்படுத்தி, செல்போன்களிலும் தனது குரோம் தேடுபொறியை, டிபால்ட் செயலியாக கூகுள் இடம்பெறச் செய்வதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, மற்ற இயங்குதளங்கள் மற்றும் செயலிகள் தயாரிப்பு வணிகத்தில் பெரும் தடையை ஏற்படுத்தி, வர்த்தக சமநிலைப் போட்டிக்கான சூழல் இல்லாமல் செய்வதாகவும் கூகுள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கில், கூகுளுக்கு எதிராக அமெரிக்க அரசும் நீதிமன்றத்தில் தனது கருத்தை பதிவு செய்யவிருக்கிறது. இணையதள வினியோகத்தை கூகுள் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை, முடிவுக்கு கொண்டு வருவதுடன், எதிர்காலத்திலும் இந்நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என, அரசு தரப்பில் வலியுறுத்தப்பட உள்ளது. மேலும், கூகுளின் குரோம் தேடுபொறியையும்; ஆண்ட்ராய்டு இயங்குதள வணிகத்தையும் இருவேறு நிறுவனங்களாக பிரிக்குமாறு கூகுளுக்கு உத்தரவிடுமாறும், அமெரிக்க அரசு வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.

மொபைல் நிறுவனங்களுக்கு ரூ.2.20 லட்சம் கோடி பணம்

தனது குரோம் தேடுபொறியை டிபால்ட் செயலியாக இடம்பெறச் செய்ய, மொபைல்போன் நிறுவனங்களுக்கு இதுவரை கிட்டத்தட்ட 2.20 லட்சம் கோடி ரூபாயை வழங்கியிருக்கிறது கூகுள்.இனி தயாரிக்கப்படும் மொபைல்போன்களில், குரோம் தேடுபொறியை டிபால்ட் செயலியாக இடம்பெறுவதற்கு, கூகுள் பணம் வழங்குவதை தடை செய்யவும், அமெரிக்க அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளது. நவம்பர் 20ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது. இந்த வழக்கில் தனது தீர்வை கூகுள் வழங்க, டிசம்பர் 20ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை