பென்ஷன் திட்டத்தில் பெண்கள் ஆர்வம்
அ டல் பென்ஷன் திட்டம் 10வது ஆண்டை எட்டியிருக்கும் நிலையில், இத்திட்டத்தில் இணைந்துள்ளவர்கள் எண்ணிக்கை, 81 மில்லியனுக்கு மேல் உயர்ந்துள்ளது. அமைப்புசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்கள் ஓய்வூதிய நலனுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், அடல் பென்ஷன் யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் இத்திட்டத்தில் 11.7 மில்லியன் புதிய பயனாளிகள் இணைந்து உள்ளனர். இவர்களில், 55 சதவீதம் பெண் பயனாளிகள் என்பது குறிப்பிட்டத்தக்கது. மேலும் இத்திட்டத்தில் இளம் வயதினர் இணைவதும் அதிகரித்துள்ளது. பென்ஷன் திட்டத்திற்கு ஆதரவு அதிகரித்து வருவதற்கு வங்கிகளின் முயற்சி முக்கிய காரணம் என்று, பென்ஷன் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் எஸ்.ரமணன் கூறியுள்ளார். வங்கிகள் குறிப்பாக தனியார் வங்கிகள் இத்திட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அடல் பென்ஷன் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வங்கிகள், கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறினார். அனைத்து மாநிலங்களிலும் திட்டம் பரவலாக சென்றடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.