ஆயிரம் சந்தேகங்கள்: பங்குகளை அடமானம் வைத்து கடன் பெறலாமா?
தேவைக்கு ஏற்ப பணத்தை எடுக்கும் வசதி உள்ள, சேமிப்பு சார்ந்த முதலீடு எது? அதே நேரம் சேமிப்புக்கு அதிக வட்டி தரும் முதலீட்டு நிறுவனம் எது? பணத்துக்கு பாதுகாப்பு மற்றும் தேவைக்கேற்ப அதிக வட்டி தரும் முதலீடு எது? - ஆர்.எம்.செல்வி, தேனி. சிறு நிதி வங்கிகளை அணுகவும்; அங்கே, 5 லட்சம் ரூபாய் வரை வைப்பு நிதிக்கு காப்பீடு இருக்கிறது. தேவைக்கேற்ப கணக்கை முடித்து, முதலீடு செய்த பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். மற்ற வங்கிகள் வழங்கும் வட்டியை விட, சிறு நிதி வங்கிகள் சற்றே கூடுதலான வட்டி தருகின்றன; அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். என் வயது 50. மகளுக்கு 11 வயது ஆகிறது. கையில் 7 லட்சம் ரூபாய் இருக்கிறது. மகளின் திருமணத்துக்கு ஏற்ப இத்தொகையை முதலீடு செய்ய திட்டம். கொஞ்சம் வழிகாட்டுங்கள். - ஜெயகுமார், மயிலாடுதுறை இன்றைக்கு எந்த பெண்ணும் பட்ட மேற்படிப்பு படிக்காமல், வேலைக்கு போய் சொந்தமாக சம்பாதிக்காமல் திருமணம் செய்து கொள்வதில்லை. 25 வயதில் திருமணம் கைகூடுகிறது என்று வைத்துக் கொண்டால், இன்னும் 14 ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது. நல்ல வருவாய் ஈட்டக்கூடிய 3 அல்லது 4 லார்ஜ் கேப், ப்ளெக்சி கேப் மியூச்சுவல் பண்டு களை தேர்வு செய்து முதலீடு செய்துவிட்டு காத்திருங்கள். உங்கள் மகளுக்கு 25 வயது ஆகும்போது, 7, 14 ஆகவும், 14, 28 ஆகவும் ஆகியிருப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஏறத்தாழ 35 ஆண்டுகள் பணியாற்றிய என்ன்னுடைய இ.பி.எஸ்., பென்ஷன் வெறும் 1,276 ரூபாய். எனக்கு வயது 80. குறைந்தபட்ச பென்ஷன் தொகையை மத்திய அரசு உயர்த்த மாட்டேன் என்கிறதே? - கே.சந்திரசேகரன் சென்னை நான் தனியார் துறையில் 30 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். 12 சதவீதம் பி.எப்., பிடித்தம் செய்தனர். ஆனால், பென்ஷன் 850 ரூபாய் தான் வருகிறது. இதை உயர்த்தி வழங்க, பார்லிமென்ட் நிலைக்குழுவில் பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. எப்போது உயர்த்தி வழங்குவர்? - கே.என்.ரங்கசாமி, கோவை உங்களை போல் பலரும் இந்த கேள்வியை கேட்டு வருகிறீர்கள். கடந்த வாரம் பார்லிமென்டில் பி.எப்., பென்ஷன் தொடர்பாக இணை அமைச்சர் ஷோபா பதில் அளிக்கும் போது, 'பி.எப்., தொகுப்பில் உள்ள நிதி போதுமான அளவு இல்லை. 'அதனால், மத்திய அரசு தனியே நிதி ஒதுக்கீடு செய்வதன் வாயிலாகவே, தற்போது ஓய்வூதியர்களுக்கு 1,000 ரூபாய் பென்ஷன் வழங்கப்படுகிறது' என்று தெரிவித்தார். அதாவது, இப்போதைக்கு பென்ஷன் தொகை உயர்த்தப்படாது என்பது செய்தி. பங்கு சந்தையில் உள்ள என் பங்குகளை வைத்து கடன் பெற முடியுமா? விளக்க வேண்டுகிறேன். - ஏ.பாலசந்தர், சென்னை வாங்க முடியும். பல வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் இந்த வசதியை அளிக்கின்றன. ஒவ்வொரு நிதி நிறுவனமும், எந்தெந்த பங்குகளுக்கு இத்தகைய கடன் கொடுக்கலாம் என்று பட்டியல் வைத்துள்ளன. அந்த பட்டியலில், நீங்கள் வைத்துள்ள பங்கு இருக்கிறதா என்று பாருங்கள். பின்னர், இணையம் வாயிலாகவே உங்கள் பங்குகளை அடகு வைக்கலாம். பொதுவாக, பங்கின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் வரை மட்டுமே கடன் கொடுக்கப்படும். வட்டி ஆண்டொன்றுக்கு 8 முதல் 15 சதவீதம் வரை ஆகும். கடன் அப்ரூவல் ஆகிவிட்டால், அந்த தொகை, 'ஓவர் டிராப்ட்' மாதிரி, உங்கள் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். பயன் படுத்தும் தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும். ஒருவேளை உங்களது பங்குகளின் விலை கணிசமாக வீழ்ந்தால், வங்கிகள் 'மார்ஜின் கால்' கொடுப்பர். அதாவது, கொடுத்த கடனுக்கு இணையாக கூடுதல் பங்குகளை அடகு வைக்க சொல்வர் அல்லது கொடுத்த கடனில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தச் சொல்வர். உங்களால் பணத்தை கட்ட முடியவில்லை என்றால், வங்கிகள் அந்த பங்குகளை விற்பனை செய்து, தங்களுக்கு வர வேண்டிய தொகையை வசூல் செய்து கொள்ளலாம். என்ன ஒரு சவுகரியம் என்றால், அடகு வைக்கப் பட்ட பங்குகளின் ஈவுத்தொகை உங்களுக்கு தான் வந்து சேரும். நான் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கும்போது, அதற்கு 10,000 முதல் 15,000 ரூபாய் என்ற லிமிட் வைத்துள்ளேன். லாபம் வந்தால் சரி, நஷ்டம் வந்தால் அந்த பத்தாயிரத்துடன் போய்விடும் என்ற உத்தி. இப்படி இதுவரை 23 நிறுவனங்களின் பங்குகள் வரை வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் 15 நிறுவனங்களை 'வாட்ச் லிஸ்டில்' வைத்திருக்கிறேன். பொதுவாக ஆரோக்கியமான ஒரு போர்ட்போலியோவில் 20 -- 25 நிறுவன பங்குகள் இருப்பதே நல்லது என்கின்றனர். எனக்கு ஒரே பங்கில் மேலும் மேலும் முதலீடு செய்ய பயமாக இருக்கிறது. அப்படி செய்தபோது, பலத்த அடி வாங்கினேன். நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லவும். - சந்துரு, சேலம் ஏறத்தாழ 20 முதல் 25 நிறுவன பங்குகள் என்பதே மிகவும் அதிகம் என்பது என் அபிப்பிராயம். வேறு எந்த வேலையும் செய்யாமல் முழு நேரமாக பங்கு சந்தையில் மட்டுமே இயங்குபவராக இருந்தால், இத்தனை பங்குகளை வைத்து நிர்வகிக்க முடியும். இல்லையெனில், 10 முதல் 15 நிறுவன பங்குகளே அதிகம். பருவகால மழை போல பங்கு சந்தையும் ஒரு நாள் போல் அடுத்த நாள் இராது. வலுவான நிறுவனங்களே தலைகுப்புற கவிழ்ந்து விடுகின்றன. இதில், 10 நிறுவனங்களை தொடர்ச்சியாக கண்காணித்து வரவே நேரம் சரியாக இருக்கும். ஒவ்வொரு நிறுவன பங்கிலும் மொத்தமாக பணம் போட வேண்டாம். சிறு முதலீட்டாளர்கள் எப்போதும் சிறுக கட்டி பெருக வாழ்வதே உத்தமம். ஆய்வுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்ட தரமான 10 நிறுவன பங்குகள் கொண்ட ஒரு தொகுப்பை உருவாக்கி கொள்ளுங்கள். அதில், ஒவ்வொரு மாதமும் இவ்வளவு எண்ணிக்கையிலான பங்குகள் தான் வாங்க வேண்டும் என்பதை வரையறை செய்து கொள்ளுங்கள். இந்த விபரத்தை உங்கள் டிரேடிங் வலைதளத்தில், 'பாஸ்கட் ஆர்டர்' ஆக போட்டு வையுங்கள். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை இந்த தொகுப்புக்கு ஒதுக்கி, வாங்கி வாருங்கள். இது, மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி., மாதிரி தான். விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, லாபம் கிடைப்பது நிச்சயம். வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.com ph: 98410 53881