உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / ஆயிரம் சந்தேகங்கள் / ஆயிரம் சந்தேகங்கள்: செல்வ மகள் திட்டம் சிறந்ததா?

ஆயிரம் சந்தேகங்கள்: செல்வ மகள் திட்டம் சிறந்ததா?

சமையல் எரிவாயு சிலிண்டர் டீலர்ஷிப் துவங்க எவ்வளவு செலவு ஆகும்? எங்கு, எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?சி.சாமிநாதன், குளித்தலை.இதுதொடர்பாக விபரம் தெரிந்தவர்களிடம் விசாரித்தபோது, சமையல் எரிவாயு உருளை வினியோக நிறுவனம் துவங்குவதற்கு 30 லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று சொல்கின்றனர். தற்போது ஒரு எரிவாயு உருளை விற்றால், 73 ரூபாய் கமிஷன் கிடைக்கும். தோராயமாக ஒரு மாதத்தில், 50,000 முதல் 2 லட்சம் ரூபாய் லாபம் பார்க்கலாம் என்கின்றனர். இதற்கு வினியோக பகுதி அமையும் இடம், அங்கே எரிவாயு உருளை எவ்வளவு அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது என்பது போன்ற அம்சங்கள் முக்கியம். எங்கேயெல்லாம் வினியோகஸ்தர்களுக்கான தேவை இருக்கிறது என்பதை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது பத்திரிகையில் விளம்பரம் செய்யும். அல்லது இந்தச் சுட்டியில் போய் பாருங்கள் : https://www.lpgvitarakchayan.in/. விரிவான வழிமுறைகளும், நெறிமுறைகளும் கூட இந்தத் தளத்தில் வழங்கப்பட்டுள்ளன. நான் தனியார் கார் நிறுவனத்தில், 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இ.பி.எப்., 95 அதிக ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ளேன். இன்னும், 10 ஆண்டுகள் பணி உள்ளது. திட்டம் நல்ல திட்டமா? முறையாக அதிக ஓய்வூதியம் கிடைக்குமா? ஞா.பரமேஸ்வரன், சென்னை-முறையாக ஓய்வூதியம் கிடைக்கும் என்பது நிச்சயம். திட்டம் நல்ல திட்டமா, இல்லையா என்பது ஒவ்வொருவரது பார்வையைப் பொறுத்தது. கூடுதல் ஓய்வூதியக் கணக்கில், 'புரோ ரேட்டா' கணக்கீட்டு முறை கொண்டுவரப்படும் என்று ஒரு செய்தி சொல்கிறது. ஆனால், அது சுற்றறிக்கையாக வெளியிடப்பட்டது போன்று தெரியவில்லை. இந்த 'புரோ ரேட்டா' முறை என்பது எப்படிக் கணக்கிடப்படும் என்பதை பி.எப்., அலுவலகம் தெளிவுபடுத்தும் வரை கூடுதல் ஓய்வுதியம் கிடைக்குமா என்பதில் உள்ள குழப்பம் நீடிக்கவே செய்யும்.நான், 11 லட்சம் ரூபாய் லோனுக்கு 15 வருடத்திற்கு மாதம் 12,000 இ.எம்.ஐ., கட்டுகிறேன். என்னால் 3000 ரூபாய் மாதம் அதிகம் கட்ட முடியும். அந்தத் தொகையை நான் பேங்கில் சென்று இ.எம்.ஐ., 15,000 மாற்றிக் கொள்ளலாமா? அல்லது இ.எம்.ஐ., 12,000 ரூபாய் ஆட்டோ டெபிட் ஆன பின்னால் 3,000 ரூபாயை ரொக்கமாக கட்டலாமா? சக்திவேல், திருப்பூர்கடந்த வாரம் இதுபற்றி எழுதிய பின்னர் நிறைய பேர் இதுபோன்ற கேள்விகளை எழுப்பி வருகிறீர்கள். ஓராண்டில், ஒரு இ.எம்.ஐ., தொகையைக் கூடுதலாக செலுத்தினால், அது கடனின் அசல் தொகையில் வரவு வைக்கப்படும். அதன் வாயிலாக அசல் தொகையே குறைந்து போகும். உங்கள் விஷயத்தில், இந்த கூடுதல் 3,000 தொகையை ஏதேனும் எப்.டி.,யில் போட்டு வாருங்கள். ஓராண்டுக்கு ஒருமுறை, எப்.டி.,யில் சேரும் அசல் பிளஸ் வட்டியை, வீட்டுக் கடனில் கட்டுங்கள். திருப்பிச் செலுத்த வேண்டிய அசல் தொகை குறையும். மாதாமாதம் செய்வதை விட, இது ஒரு திட்டமிட்ட முறையாக இருக்கும்.நான் சிறு தொழில் நடத்தி வருகிறேன். மிஷின் வாங்க வங்கியில், 3.5 லட்சம் எம்.எஸ்.எம்.இ., லோன் வாங்கி ஒன்றரை வருடமாக பணம் பிடித்தம் செய்கின்றனர். இன்னொரு மிஷின் வாங்க மேற்கொண்டு லோன் வாங்க முடியுமா?ஸ்ரீதர், அம்பத்துார்கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்திவரும் வரை கூடுதல் கடன் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை. கேட்டுப் பாருங்கள்.இருபது ஆண்டுகளுக்கு முன்பு சுயதொழில் செய்து வருமான வரி செலுத்தி வந்தேன். அச்சமயம் எனக்கு வருமான வரித்துறையால் நிரந்தரக் கணக்கு எண் மற்றும் கருப்பு வெள்ளையிலான அடையாள அட்டை வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித சுயதொழிலும் செய்யவில்லை. தற்போது ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலராக பணியாற்றி வருகிறேன். தற்போது என் அடையாள அட்டையை மீட்டுருவாக்கம் செய்யஇயலுமா? அல்லது புதிதாக விண்ணப்பிக்க வேண்டுமா? தி.மார்ட்டின், சென்னை மீட்டுருவாக்கம் என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. பான் எண் என்பது வாழ்நாள் முழுக்க செல்லுபடியாகக் கூடியது. அது பழைய கருப்பு வெளுப்பு அட்டையாக இருந்தாலும் ஒன்றும் பிரச்னை இல்லை. ஒருவேளை அந்த அட்டை தொலைந்து போனாலோ, காணாமல் போனாலோ, சிதைந்து போனாலோ மட்டும் நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். இந்த வலைத்தளத்துக்கு https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html சென்று, உரிய விபரங்கள் கொடுத்து பதிவு செய்தால், அடுத்த 15, 20 நாட்களில் வீட்டுக்கே பான் அட்டை வந்து சேரும்.பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பற்றி தெரிவியுங்கள். அ.அருள், காரைக்குடிபெண் குழந்தைகளுக்கு பெற்றோர் செய்யும் சிறந்த முதலீடு இது. ஆண்டு ஒன்றுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்யலாம். இதற்கு, 8.2 சதவீத வட்டி கிடைக்கும். வேறு எந்த அரசு திட்டத்திலும் இவ்வளவு கூடுதல் வட்டி கிடைப்பதில்லை. குழந்தைக்கு, 10 வயதுக்கு முன்னதாகவே கணக்கு துவங்க வேண்டும். 15 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டும். முதிர்வு காலம், 21 ஆண்டுகள். இது 'லாக் இன்' பீரியட். ஒரு குடும்பத்தில் இரண்டு கணக்குகள் வரை, அதாவது, இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் கணக்குகள் துவங்கலாம். சும்மா ஒரு கணக்கு போட்டுப் பாருங்கள். உங்கள் பெண் பெயரில், 5 வயதில் கணக்கு துவங்கி, மாதம்தோறும் 12,000 போடுகிறீர்கள். ஆண்டுக்கு 1.44 லட்சம் முதலீடு. 15 ஆண்டுகளில் நீங்கள் செய்யும் முதலீடு, 21.60 லட்சம் ரூபாய். அதற்கு 21 ஆண்டுகளில் கிடைக்கும் வட்டி 39,50,549. அதாவது, உங்கள் மகளுக்கு 26 வயது ஆகும்போது கிடைக்கும் மொத்த தொகை, 61 லட்சம் ரூபாய்க்கு மேல். வீடு கட்டுகிறேன். கையில் உள்ள பணம், கட்டட செலவில் பாதி வரை தான் தாங்கும். இன்னும் பணம் வேண்டும். பர்சனல் லோன் வாங்கலாமா, வீட்டு அடமானக் கடன் வாங்கலாமா?பாலசுப்பிரமணியன், மதுரை.பர்சனல் லோனுக்கு வட்டி அதிகம். வீட்டு அடமானக் கடனில் சற்றே வட்டி குறைவு. டிசம்பர் பணக்கொள்கைக் குழு கூட்டத்தில் கால் சதவீத வட்டி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டிலும் வட்டி நன்கு குறைய வாய்ப்புள்ளது. அதனால், நீங்கள் சீக்கிரமே வீட்டு அடமானக் கடனை அடைத்துவிட முடியும்.வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம். ஆயிரம் சந்தேகங்கள்தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும். ஆர்.வெங்கடேஷ் gmail.comph:98410 53881


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை