ஆயிரம் சந்தேகங்கள்
நாமினிக்கு பணம் தராமல் வங்கி இழுத்தடிப்பது ஏன்?பிரபல நகைக்கடையில் நகை வாங்கினேன். ஜி.எஸ்.டி., பில் தரப்பட்டது. நண்பர் ஒருவர் அதை பார்த்துவிட்டு, எச்.யு.ஐ.டி., எண் குறிப்பிடவில்லை. அதை கேட்டு வாங்குங்கள், பின்னாளில் பயன்படும் என்றார். நகைக்கடையில் கேட்டால் நகையில் எச்.யு.ஐ.டி., பொறிக்கப்பட்டுள்ளது. பில்லில் தரும் வழக்கம் எங்கள் கடையில் இல்லை என்று கூறுகின்றனர். இது உண்மையா? அதே கடையில் நகைச்சீட்டு போட்டுள்ளோம். அந்த சீட்டு முடியும்போது, நகை வாங்கினால் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் ஆதார் அட்டை நகல் குறிப்பிடப்பட்ட அலைபேசி கொண்டு வர வேண்டும் என்று கூறுகின்றர். அலைபேசி எண் ஓ.டி.பி.க்காக என்பது புரிகிறது. போட்டோ ஆதார் அட்டை நகல் எதற்கு? பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டால் தர மாட்டோம் என்கின்றனர். கொஞ்சம் விளக்குங்கள். பெயர் குறிப்பிட விரும்பாத வாசகர், திண்டுக்கல் உங்கள் நண்பர் சொன்னதில் ஒரு பகுதி சரி. நீங்கள் வாங்கும் தங்க நகையில் பி.ஐ.எஸ்., ஹால்மார்க், துாய்மை குறியீடு (உதா: 22K916) மற்றும் ஆறு இலக்க எச்.யு.ஐ.டி., பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தற்போதைய பி.ஐ.எஸ்., விதிகளின்படி எச்.யு.ஐ.டி., எண்ணை ஜி.எஸ்.டி., பில்லில் கட்டாயமாக குறிப்பிட வேண்டும் என்ற விதி இல்லை. சில நகைக்கடைகள் குறிப்பிடுகின்றன; சிலர் குறிப்பிடுவதில்லை. எனவே, பில்லில் எச்.யு.ஐ.டி., இல்லாதது மட்டுமே விதிமீறல் என்று சொல்ல முடியாது. ஆனாலும், நகையில் பொறிக்கப்பட்டுள்ள எச்.யு.ஐ.டி., எண்ணை பி.ஐ.எஸ்., கேர் (BIS Care) என்ற செயலியில் சரிபார்த்து கொள்வது நல்லது. நகைச்சீட்டு விஷயத்தில், முதிர்வின்போது, ஆதார் எண் கேட்பது கொஞ்ச காலமாகவே நடைமுறைக்கு வந்துள்ளது. குறிப்பாக, பினாமி பரிவர்த்தனைகள் மற்றும் கறுப்பு பணம், நகைச்சீட்டு வழியாக புழங்குவதை தடுக்க, பணமோசடி தடுப்பு சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.,) கீழ் நகைக்கடைகள் தற்போது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதனால்தான், பணத்தை செலுத்திய அதே நபர்தான் நகையை வாங்குகிறார் என்பதை உறுதி செய்ய புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் ஓ.டி.பி., கேட்பது நடைமுறைக்கு வந்துள்ளது. நீங்கள் நகைச்சீட்டு ஆரம்பித்தபோது, அதற்கான விதிமுறைகளை கொடுத்திருப்பார்களே? அதில் பணம் திரும்ப தரப்படுமா, தரப்படாதா என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்து முடிவு செய்துகொள்ளுங்கள். மதுரை தனியார் வங்கி ஒன்றில், இணை கணக்கு வைத்திருந்தவர் மறைந்த பிறகும், இ.ஆர்.எஸ்., மற்றும் நாமினி இருந்தும், வைப்புத் தொகையை முடிக்க பல வாரங்களாக தாமதம் ஏற்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வ விண்ணப்பத்துக்கும், ஆவண பட்டியல் கேட்டதற்கும் பதில் இல்லை. தலைமை அலுவலகத்திலும் புகார் அளித்தோம்; ஆனாலும், கிளையில் நடவடிக்கை இல்லை. இதற்கு தீர்வு என்ன? - வி.சந்தானகோபாலன், மதுரை 'மயிலே, மயிலே இறகு போடு' என்றால் போடாது. போட வைக்க வேண்டும். பேச்சுவார்த்தை இனி உதவாது. நீங்கள் முதலில் ஒரு பதிவு தபால் போடுங்கள். அதில் ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, இறந்தவரின் இறப்பு சான்றிதழ் நகலையும் இணைத்து, '15 நாட்களுக்குள் தொகையை வழங்காவிட்டால் ரிசர்வ் வங்கியில் புகார் அளிப்பேன்' என்று அந்த வங்கி கிளை மேலாளருக்கும், தலைமையகத்துக்கும் 'ரெஜிஸ்டர்டு போஸ்ட் வித் அக்னாலஜ்மென்ட் டியூ' உடனடியாக அனுப்புங்கள். கடிதம் கொடுத்ததற்கான ஆதாரம் உங்கள் கையில் இருக்க வேண்டும். புகார் அளித்து 30 நாட்கள் காத்திருங்கள். அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலோ, அளித்த பதிலில் உங்களுக்கு திருப்தி இல்லையோ என்றாலோ ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்க்கும் மையத்தில் புகார் அளிக்கலாம். இதை https://cms.rbi.org.inஎன்ற வலைத்தளம் மூலமாகவோ அல்லது 14448 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம். மேலும், தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகும் வங்கி தேவையற்ற தாமதம் செய்திருந்தால், அதனால் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் புகாரில் தெளிவாக குறிப்பிடுங்கள். தாமதத்துக்கான இழப்பீடு அல்லது வட்டி வழங்கப்பட வேண்டுமா என்பதை, சம்பவத்தின் தன்மை மற்றும் வங்கியின் கொள்கைகளை பொறுத்து குறைதீர்ப்பு அமைப்பு பரிசீலிக்கும். அதன் பிறகு குறைதீர் ஆணையர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். தங்கம் வாங்கி, விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள புரசைவாக்கத்தை சேர்ந்த ஒருவர், என்னை அவரது தொழிலில் முதலீடு செய்ய சொன்னார். ஆறு லட்சம் போட்டேன். முதல் மூன்று மாதங்கள் வட்டி கொடுத்தார். அதன் பின்னர் அவரிடமிருந்து வட்டியும் வரவில்லை, அசலும் திரும்பவில்லை. அவர் கொடுத்த காசோலைகள் என்னிடம் உள்ளன. அவரது வங்கியில் காசோலை போடப் போகும்போதெல்லாம், கணக்கில் பணம் இல்லை என்கிறார்கள். நான் தாம்பரம் சானடோரியத்தில் இருக்கிறேன். தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாமா? - சீனிவாசன், தாம்பரம் சானடோரியம் நான் பலமுறை இந்த பகுதியில் மீண்டும், மீண்டும் எச்சரித்து வருகிறேன். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அறியாத, தெரியாத சின்னச் சின்ன நிறுவனங்களில் முதலீடு செய்யாதீர்கள் என்கிறேன். ஆனால், உங்களை போன்ற பலர் அதே சிக்கலில் மாட்டிக்கொண்டு அவஸ்தைபடுகிறீர்கள். நீங்கள் தாம்பரம் சானடோரியத்தில் இருப்பதாலும், உங்களுடைய வங்கி பரிவர்த்தனைகளும் அங்கேயே இருப்பதாலும், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். அல்லது வழக்கின் தன்மையை பொறுத்து, பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளிக்கலாம். இன்னொரு பக்கம், கையில் இருக்கும் காசோலையை உடனடியாக வங்கியில் டெபாசிட் செய்யுங்கள். பணமில்லாமல் 'பவுன்ஸ்' ஆகும். வங்கியில் இருந்து அதிகாரப்பூர்வமான 'ரிட்டர்ன் மெமோ' வாங்கிக் கொள்ளுங்கள். அந்த மெமோ கிடைத்த சரியாக 30 நாட்களுக்குள், ஒரு வழக்கறிஞர் வாயிலாக மோசடி நபருக்கு 'நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமென்ட் சட்டம் பிரிவு 138'ன் கீழ் அதிகாரப்பூர்வ வக்கீல் நோட்டீஸ் அனுப்புங்கள். நோட்டீஸ் கிடைத்து 15 நாட்களுக்குள் அவர் பணத்தை செலுத்தவில்லை என்றால், அதன் பின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். மேலே சொன்ன வழிமுறையை பலருக்கும் சொல்லியிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற வழக்குகள் விரைவில் முடிவுக்கு வருவதில்லை. பார்லிமென்டில் அளிக்கப்பட்ட பதிலில், 18.12.2024 நிலவரப்படி தமிழகத்தில் 1,51,932 காசோலை பவுன்ஸ் வழக்குகள் இருந்தன என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.