உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / ஆயிரம் சந்தேகங்கள் / ஆயிரம் சந்தேகங்கள்: பணம் கொடுக்காமல் நாமே ஜி.எஸ்.டி., பதிவு செய்ய முடியாதா?

ஆயிரம் சந்தேகங்கள்: பணம் கொடுக்காமல் நாமே ஜி.எஸ்.டி., பதிவு செய்ய முடியாதா?

கமாடிட்டி மார்க்கெட் என்றால் என்ன? இதில் நீண்ட காலத்தில் முதலீடு செய்தால் லாபம் ஈட்ட முடியுமா? இதில் முதலீடு செய்ய கவனத்தில் கொள்ள வேண்டிய இனங்கள் என்ன? எவ்வாறு முதலீடு செய்வது?

ச.ஹேமலதா, காஞ்சிபுரம்.கமாடிட்டி சந்தை என்பது தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், அலுமினியம், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களின் விலை ஏற்ற, இறக்கங்களையொட்டி செய்யப்படும் யூக வணிகமாகும். பங்குச் சந்தை யூக வணிகத்தைக்கூட ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும். கமாடிட்டி சந்தையை தெரிந்து கொள்வதற்கு, உங்களுக்குள் சிறப்பு நரம்பு ஒன்று ஓட வேண்டும். மல்டி கமாடிட்டி சந்தை வலைதளத்துக்கு (https://www.mcxindia.com/home) சென்றால், அங்கேயே நிறைய ஆன்லைன் வகுப்புகள் உள்ளன. தமிழிலும் நிறைய புத்தகங்கள் வெளிவந்துள்ளன. நிதானமாக இவற்றை வாசித்து புரிந்து, பின்னர் களமிறங்குங்கள். 'சித்திரமும் கைப்பழக்கம்' என்று சும்மாவா சொன்னார்கள். பயிற்சி எடுத்துக்கொண்டு, எச்சரிக்கையோடு சந்தைக்குள் வாருங்கள்.

நான் 10 ஆண்டுகளுக்கு முன் பான் கார்டு எடுத்தேன். தற்போது வங்கி கணக்கு வைத்துள்ள தேசிய வங்கியில் கே.ஒய்.சி., விபரம் கேட்டனர். அந்த விபரங்களில், என் பான் கார்டில் பெயர் பிழை மற்றும் நான் என்.ஆர்.ஐ., என்றும் உள்ளது. இ - --சேவை மையங்களில் இதை திருத்தம் செய்ய முடியுமா?

க.நந்தினி, திருவில்லிபுத்துார், விருதுநகர் மாவட்டம். இன்றைக்கு பான் அட்டையில் ஏற்பட்டுள்ள பல்வேறு குறைகளை திருத்திக்கொள்ள வலைதள வசதி வந்துவிட்டது. இந்த சுட்டிக்கு https://www.pan.utiitsl.com/csf.html செல்லுங்கள். நிதானமாக படித்து புரிந்துகொண்டு, படிப்படியாக என்ன திருத்தம் வேண்டுமோ அதைச் செய்து கொள்ளுங்கள். இதெல்லாம் ஏதோ அன்னியமாகத் தெரியுமானால், உங்கள் ஊரிலேயே பான் அட்டை திருத்தம் செய்து தருவதற்கான முகவர்கள், கடைகள் இருக்கும். அவர்களை அணுகுங்கள். சிறிய கட்டணத்துடன் திருத்தங்களை செய்துகொள்ளலாம்.

தவிர்க்க முடியாத தருணங்களில் ஒருசிலருக்கு கடன் கொடுக்க வேண்டியிருக்கிறது. பணம் வாங்கிய நபர், அந்த தொகையை திருப்பித் தரவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழியுள்ளதா?

எஸ்.சிவகுமார், மின்னஞ்சல்.தவிர்க்க முடியும், முடியாது என்பது விஷயமல்ல. நாளை பணம் திரும்ப வரவில்லை என்றால், நடவடிக்கை எடுப்பதற்கு ஓர் ஆவணம் வேண்டும். நீங்கள் பணம் கொடுத்ததற்கும், அவர் வாங்கியதற்கும் உரிய ஆதாரங்கள் வேண்டும். அது முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகளோடு இருக்க வேண்டும். அது இல்லாமல், வழக்கே பதிய முடியாது; நீதிமன்றத்தை நாடவும் முடியாது; சட்ட ரீதியான பரிகாரத்தை பெறவும் முடியாது. சமீப முன்னேற்றம் ஒன்றையும் தெரிந்துகொள்ளுங்கள். 'முறைப்படுத்தப்படாத கடன் செயல்பாடுகளை தடை செய்தல்' - புலா என்ற புதிய சட்ட மசோதா ஒன்று பார்லிமென்டில் நிலுவையில் இருக்கிறது. இதன்படி, தனிநபர்கள், உறவினர்களுக்கு கொடுக்கும் கடனைத் தவிர, மற்ற 20 வகையான கடன்களும் இனி அனுமதிக்கப்படாது. அதனால், கடன் கொடுப்பதை அறவே மறந்துவிடுங்கள். இந்தச் சட்டம் அமலானால், வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுக்கும் தனிநபர்களை, நீதிமன்றம் கூட காப்பாற்ற துணை நிற்காது.

என் பிள்ளை ஓவிய வகுப்பில் வரைந்த ஓவியங்களை, ஆன்லைனில் விற்பனை செய்யலாம் என்று நினைத்து, ஜி.எஸ்.டி., பதிவு செய்ய நாங்களே முயற்சி செய்தோம். அதில், தொழில் என்ற வகையில் ஓவியங்களை சேர்க்க வாய்ப்பு இல்லை. வெளியில் ஜி.எஸ்.டி., பதிவு செய்து தர 2,000 ரூபாய் கேட்கின்றனர். நாமே வீட்டிலிருந்து ஜி.எஸ்.டி., பதிவு பண்ண முடியாதா?

அபர்ணா ஜெயராமன், வாட்ஸாப்.செய்ய முடியும் என்று தான் ஜி.எஸ்.டி., வலைதளம் சொல்கிறது. இந்தச் சுட்டிக்கு https://tutorial.gst.gov.in/userguide/registration/Apply_for_Registration_Normal_Taxpayer.htm செல்லுங்கள். இங்கே பதிவு செய்வதற்கான விரிவான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. கொஞ்சம் இணையத்தில் துழாவினீர்கள் என்றால், உங்களை போன்றே பதிவு செய்ய முயல்பவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருப்பர். அவற்றை படித்து, உதவி பெறுங்கள்.

நான் பொது துறை வங்கியில் வீட்டுக்கடன் பெற்றேன். அதை முழுதாக அடைத்துவிட்டேன். 15 நாட்களுக்கு மேல் ஆகியும் என் டாக்குமென்ட் கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும்? நான் என்ன செய்ய வேண்டும்?

சரவணன், சென்னைஇதற்குள் கிடைத்திருக்க வேண்டுமே? 15 நாளே அதிகம். கடனுக்கு ஈடான வீட்டு ஆவணங்களை வைப்பதற்கும், நிர்வகிப்பதற்கும் ஒவ்வொரு வங்கியும் ஓரிடத்தை குறித்திருப்பர். சில சமயங்களில் அங்கேயே போய் ஆவணங்களை வாங்கிக்கொள்ளச் சொல்வர். வங்கியை பொறுத்தவரை, கொடுத்த கடன் திரும்பிவிட்டது. இனிமேல் அவர்களுக்கு வயிற்று வலி இல்லை. ஆவணத்தை பெறுவது வரை உங்களுக்குத் தான் வயிற்று வலி. அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு வங்கியிலேயே போய் தவமாய் இருங்கள்.

வங்கி கணக்கு உள்ள அலைபேசி தொலைந்து விட்டால் அல்லது களவு போனால், நாம் என்ன செய்ய வேண்டும்?

செ.செல்வக்கோ பெருமாள், காஞ்சிபுரம்.உடனடியாக வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைத்து, போன் தொலைந்து போய்விட்டது என்பதை தெரிவியுங்கள். அதில் மொபைல் பேங்கிங் செயலி, யு.பி.ஐ., செயலி, மொபைல் வாலட் ஆகியவற்றை செயல்படவிடாமல் தடுத்துவிடுங்கள். கூடவே, உங்கள் வங்கிக் கணக்கை கவனித்துக்கொண்டே இருங்கள். ஏதேனும் தவறான பரிவர்த்தனைகள் நடைபெறா வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்னொரு பக்கம், தொலைபேசி சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டு, போன் தொலைந்துவிட்டதைச் சொல்லி, அந்த எண்ணுக்கான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள். அதே எண்ணில் புதிய சிம் கார்டு வாங்கிக் கொள்ளுங்கள். காவல் துறைக்குப் போய் போன் காணாமல் போய்விட்டது என்று புகார் அளித்து, சி.எஸ்.ஆர்., பிரதியேனும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.இவற்றை செய்யும்போதே, உங்கள் வங்கி, மொபைல் பேங்கிங், மின்னஞ்சல் உள்ளிட்ட அத்தனை இடங்களிலும் கடவுச் சொல்லை மாற்றிவிடுங்கள். அந்தக் காலத்தில் ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி, மலை உச்சியில் இருக்கும் கிளியின் நெஞ்சில் தான் உயிர் இருக்கும் என்று கதை படித்திருப்போம். இப்போது நம் உயிர், மொபைல் போனில் தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதை எந்தக் காலத்திலும் தொலைத்து விடாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KRISHNAN R
மார் 11, 2025 07:44

"ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி, மலை உச்சியில் இருக்கும் கிளியின் நெஞ்சில் தான் உயிர் இருக்கும்"____ ஹா ஹா ஹா..... சரியான விமர்சனம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை