டில்லி குண்டு வெடிப்பு வழக்கு: கைதான நபர் திடீர் பல்டி
கிஷ்த்வார்: டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர், 'இந்த சம்பவத்திற்கும், தனக்கும் சம்பந்தமில்லை' என, திடீரென பல்டியடித்துள்ளார். இதனால், தேசிய புலனாய்வு நிறுவனத்தினரின் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
டில்லியில் கடந்த 7ம் தேதி, ஐகோர்ட் வளாகத்தில் குண்டு வெடித்ததில் 15 பேர் பலியாகினர்; 80 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை, தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரித்து வருகிறது. இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பு ஏற்பதாக, இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பெயரில், செய்தி நிறுவனங்களுக்கு இ-மெயில் வந்தது. அந்த இ-மெயில் குறித்து விசாரித்த தேசிய புலனாய்வு நிறுவனத்தினர், காஷ்மீரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இருவரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ஹிலால் அமீன், அமீர் அப்பாஸ் என்ற இருவர் சிக்கினர். மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் அமீர் அப்பாசிடம் விசாரணை நடத்தியபோது, டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன், இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் பெயரில், இ-மெயிலை தயார் செய்து, அதை டிஸ்க்கில் காப்பி செய்து, பள்ளி மாணவர்கள் இருவரிடம் கொடுத்ததாகவும், டில்லியில் குண்டு வெடித்த செய்தி கேட்டவுடன், அதை செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இ-மெயிலின் வரைவு நகலை, பள்ளி மாணவர்கள் இருவரிடம் கொடுத்ததாக முதலில் ஒப்புக் கொண்ட அமீர் அப்பாஸ், தற்போது இந்த சம்பவத்துக்கும், தனக்கும் தொடர்பில்லை என்கிறார். இதனால், டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.