| ADDED : பிப் 25, 2025 10:54 PM
கோல்கட்டா : சூட்கேசில் எடுத்து வந்த பெண்ணின் சடலத்தை கங்கையாற்றில் வீச முயன்ற தாய், மகளை கோல்கட்டா போலீசார் கைது செய்தனர்.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவின் குமர்துலி பகுதியில் உள்ள கங்கை நதிக்கரையில் ஏராளமானோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்திறங்கிய இரு பெண்கள், சூட்கேசுடன் வந்தனர். அவர்கள் இருவராலும் அதை இழுத்துச் செல்ல முடியவில்லை. இதையடுத்து யோகா பயிற்சிக்கு வந்த ஒருவர், 'சூட்கேசில் என்ன இருக்கிறது? அதை ஏன் ஆற்றில் வீச செல்கிறீர்கள்' என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்கள், 'எங்கள் செல்ல நாய் இறந்து விட்டது. அதை ஆற்றில் வீச வந்தோம்' என, தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஏராளமானோர் அங்கு திரண்டு அவர்களை மாறி மாறி கேள்வி கேட்டதால் வேறு வழியின்றி அந்த பெண், சூட்கேசில் இருப்பது தனது அண்ணியின் சடலம் என்றும், அவர் தற்கொலை செய்ததால் சடலத்தை ஆற்றில் வீச கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.இரண்டு பெண்களிடமும், போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் கோல்கட்டா அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருவரும் தாய், மகள் என்பதும் தெரியவந்தது. சூட்கேசில் சடலமாக இருக்கும் பெண், அவர்களது உறவினர் என்பதும் தெரிவந்தது. அந்த பெண் கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.