பெலகாவி; இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுதிறனாளிகள் என 34,110 பேர் வீட்டில் இருந்தபடியே ஓட்டுப்பதிவு செய்து உள்ளனர்.கர்நாடகாவின் சிக்கோடி, பெலகாவி, உத்தர கன்னடா, கலபுரகி, விஜயபுரா, பீதர், பாகல்கோட், கொப்பால், ராய்ச்சூர், பல்லாரி, தார்வாட், ஹாவேரி, ஷிவமொகா, தாவணகெரே ஆகிய 14 தொகுதிகளுக்கு, வரும் 7ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.சிரமத்தை தவிர்க்கும் வகையில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர், மாற்று திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே ஓட்டு போடலாம் என்று, தேர்தல் ஆணையம் கூறி இருந்தது.இதையடுத்து 23, 213 முதியவர்கள் வீட்டில் இருந்து, ஓட்டு போட விண்ணப்பித்து இருந்தனர். வீட்டில் இருந்தபடி ஓட்டு போடும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. தேர்தல் அதிகாரிகள், முதியவர்கள் வீடுகளுக்கே சென்று ஓட்டுப்பதிவு நடத்தினர். நேற்று முன்தினமும், நேற்றும் 21,892 முதியவர்கள் ஓட்டு போட்டு உள்ளனர். அதுபோல மாற்று திறனாளிகள் 10,566 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். முதியவர்கள், மாற்று திறனாளிகள் சேர்த்து 34,110 பேர் ஓட்டுப்பதிவு செய்து உள்ளனர். இன்று கடைசி நாள் ஆகும்.