தங்கவயல் : மாரிகுப்பம்- - கே.எஸ்.ஆர்., பெங்களூரு செல்லும் சொர்ணா ரயிலில் பெட்டிகள் எண்ணிக்கை 12 ஆக குறைத்ததால் பயணியர் அவதிப்படுகின்றனர்.மாரிகுப்பத்தில் இருந்து தினமும் காலை 6:30 மணிக்கு புறப்படும் கே.எஸ்.ஆர்., பெங்களூரு செல்லும் சொர்ணா மெமு ரயிலில் மாரிகுப்பம், சாம்பியன், உரிகம், கோரமண்டல், பெமல் நகர், சின்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் பயணிக்கின்றனர். இந்த ரயிலில், 16 பெட்டிகள் இருந்து வந்தன. மூச்சு திணறல்
நேற்று திடீரென்று இந்த ரயிலில், 12 பெட்டிகள் மட்டுமே இணைத்திருந்தனர். இதனால் பயணியர் பாதிக்கப்பட்டனர். உடல் நலம் பாதித்தவர்கள், தங்களுக்கு மேலும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் அடைந்தனர். சிலருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது. இயற்கை உபாதைகள் கழிக்க ரயிலில் உள்ள கழிப்பறைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். சில இளைஞர்கள் முதியோர், கர்ப்பிணியர், உடல் நலம் பாதித்தவர்களுக்கு இருக்கையில் இருந்து எழுந்து, இடம் அளித்து உதவினர்.கூட்ட நெரிசலை பார்த்து ரயிலில் ஏறாமல் உரிகம், கோரமண்டல், பெமல் நகர் பகுதிகளை சேர்ந்த முதியோர், கை குழந்தைகளுடன் வந்த பெண்கள் சிலர் பயணத்தை தவிர்த்து வீடுகளுக்கு திரும்பினர்.மாரி குப்பத்தில் இருந்து 16 பெட்டிகளுடன் புறப்பட்ட ரயிலில் உரிகம், கோரமண்டல், பெமல் நகர் பகுதியினருக்கு கூட உட்கார்ந்து பயணம் செய்ய இடம் கிடைக்காது. ஒருவர் இருக்கையில் இரு நபர்களும்; நான்கு பேர் இருக்கையில் ஆறு பேரும் அமர்ந்து கொண்டும் பயணித்தனர். புகார்
நேற்று ஒரே நாளில் பயணியர் பெரும் அல்லல்பட்டதால் அதிருப்தி அடைந்து பொது மேலாளருக்கு புகார் செய்தனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த ரயிலில் வாரத்தில் ஒரு நாள், 12 பெட்டிகளாக குறைக்க திட்டம் உள்ளதாகவும், நாளடைவில் 12 பெட்டிகள் மட்டுமே சொர்ணா ரயிலில் இருக்கும்' என்றார்.வாழ்வாதாரம் கடந்த 30 ஆண்டுகளாக சொர்ணா ரயிலை நம்பி தான் தங்கவயல் மக்களின் வாழ்வாதாரமே அடங்கி உள்ளது. ஒருநாள் பயணம் செய்யாமல் போனால் ஒரு தொழிலாளி குறைந்த பட்சம் 500 ரூபாய் இழக்க வேண்டி உள்ளது. இந்த ரயிலில், வேலைக்காக பெங்களூரு செல்ல வசதியாக உள்ளது. 16 பெட்டிகள் தொடர வேண்டும்.-முத்து மாணிக்கம்தலைவர் அம்பேத்கர் தினப் பயணியர் சங்கம்.நெருக்கடிசாம்பியன் முதல் பெங்களூரு கன்டோன்மென்ட் வரை, 15 ஆண்டுகளுக்கு மேலாக தினப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். வேலைப்பளுவை காட்டிலும் ரயிலில் 5 மணி நேரம் பயணிக்கும் போது ஏற்படும் சிரமம் சொல்லி முடியாது. பெண்களுக்கு கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்.மகேந்தர், தினப்பயணி, சாம்பியன்குரல் கொடுங்கள் சொர்ணா ரயிலில் 4 பெட்டிகளை குறைத்தால் பயணம் செய்யவே முடியாது. தங்கவயலிலேயே இருக்க வேண்டியது தான். வேலை இல்லா கொடுமையை அனுபவிக்க வேண்டியதுதான். அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், குறிப்பாக மண்ணின் மைந்தர்கள் என்போர் தினப் பயணியர் மீது அக்கறை செலுத்த வேண்டும்.தேவன்பு, தினப்பயணி, சஞ்சய்நகர்