உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை 4.50 லட்சம் பேர் பாதிப்பு; 31 பேர் பலி

ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை 4.50 லட்சம் பேர் பாதிப்பு; 31 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விஜயவாடா: ஆந்திரா, தெலுங் கானாவில் கடந்த மூன்று நாட்களாக கொட்டி தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், 4.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பான விபத்துகளில் ஆந்திராவில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவில் பெய்த மழைக்கு, 16 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. விஜயவாடா, குண்டூர், என்.டி.ஆர்., கிருஷ்ணா, பல்நாடு, பாபட்லா, பிரகாசம், ஏலுாரு ஆகிய மாவட்டங்களில், 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது.

மீட்பு பணி

இதனால், இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மழை, வெள்ளம் குறித்து, ஆந்திர அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:வரலாறு காணாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால், விஜயவாடா, என்.டி.ஆர்., குண்டூர், கிருஷ்ணா, ஏலுாரு, பல்நாடு, பாபட்லா, பிரகாசம் ஆகிய மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன.பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் படையின், தலா 20 குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. குண்டூர், என்.டி.ஆர்., மாவட்டங்களில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில், நம் கடற்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.மாநிலத்தில் கனமழையால், ஆடு, மாடு உள்ளிட்ட 39 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 38 மீன்பிடி படகுகள் முழுமையாக சேதமடைந்து விட்டன. 1,067 கி.மீ., நீள சாலைகள் சேதமடைந்தன. 110 இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பயிர்கள் சேதம்

விஜயவாடா, குண்டூர், பாபட்லா, பல்நாடு உள்ளிட்ட 20 மாவட்டங்களில், 1.50 லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்களும், 13,920 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன. கடந்த மூன்று நாட்களில் மழையால் ஏற்பட்ட விபத்துகளில், இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். மழை, வெள்ளத்தால், 4.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் இருந்து, 31,238 பேர் மீட்கப்பட்டு, 166 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, விஜயவாடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, தெலுங்கு தேசம் தலைவரும், முதல்வருமான சந்திரபாபு நாயுடு, படகில் சென்று நேற்று பார்வையிட்டார்.

உணவின்றி தவிப்பு

அப்போது, இரு நாட்களாக குடிக்க நீரின்றியும், உணவின்றியும் தவிப்பதாக அவரிடம் பொது மக்கள் புகார் கூறினர். பல்வேறு மாவட்டங்களிலும் இதே நிலைமை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தெலுங்கானாவிலும் கொட்டி தீர்த்த கனமழையால், ஹைதராபாத், கம்மம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். தெலுங்கானாவில் மழையால் ஏற்பட்ட விபத்துகளில், 16 பேர் உயிரிழந்தனர்.மழை, வெள்ளத்தால் தெலுங்கானாவில் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக மத்திய அரசு 2,000 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும். இந்த பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். --ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்வர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை