வந்தே பாரத் மீது கல் வீச்சு சத்தீஸ்கரில் 5 பேர் கைது
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், வந்தே பாரத் விரைவு ரயில் சோதனை ஓட்டத்தின் போது, கற்களை வீசி சேதப்படுத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.வாரணாசி முதல் டில்லி வரை செல்ல உள்ள வந்தே பாரத் விரைவு ரயில், முதன்முறையாக 20 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இதை, பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கிறார். இதேபோல் சத்தீஸ்கரின் துர்க் முதல், ஆந்திராவின் விசாகப்பட்டினம் உட்பட ஆறு வழித்தடங்களில் வந்தே பாரத் விரைவு ரயிலுக்கான சேவைகளையும் அவர் துவக்கி வைக்க உள்ளார்.இந்நிலையில், ஆந்திராவின் விசாகபட்டினத்தில் இருந்து சத்தீஸ்கரின் துர்க் பகுதிக்கு வந்தே பாரத் விரைவு ரயில் சோதனை ஓட்டமாக, நேற்று முன்தினம் இயக்கப்பட்டது. அப்போது சத்தீஸ்கரின் பாக்பாஹரா ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், மூன்று பெட்டிகளின் ஜன்னல்கள் சேதமடைந்தன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், கற்களை வீசி தாக்குதல் நடத்தியது அதே பகுதியைச் சேர்ந்த சிவ்குமார் பாகேல், தேவேந்திர குமார், ஜீத்து பாண்டே, சோன்வாணி, அர்ஜுன் யாதவ் ஆகிய ஐந்து பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.